நிலத்தடி நீருக்கு வரி வாங்குவது தாய்ப்பாலுக்கு வரி விதிப்பதற்கு ஒப்பானது: சீமான்..!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த முடிவு வேளாண்மையை முற்றாக அழித்து, நாட்டை மீட்க முடியாத பஞ்சத்தில் தள்ளும் மனசான்றற்ற கொடுங்கோன்மை என்று கடுமையாக சாடியுள்ளார்.
பாஜக அரசு தற்போது கொண்டு வர முடிவு செய்துள்ள நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் கொள்கை முடிவு, முதன் முதலாக காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்டது என்றும், கடும் எதிர்ப்பின் காரணமாக கிடப்பில் போடப்பட்ட அந்தக் கொடிய திட்டத்தை தற்போது பாஜக மீண்டும் கொண்டு வர முடிவு செய்திருப்பது எதேச்சதிகாரப் போக்கின் உச்சம் என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
"வேளாண்மைக்கு நிலத்தடி நீர் எடுக்க மின்சாரம் இலவசம்; ஆனால் எடுக்கப்படும் நீருக்கு வரி என்பது முட்டாள்தனமில்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ள சீமான், நிலத்திற்கு வரி, விளைவிக்கும் பயிருக்கு வரி, விளைபொருட்களை எடுத்துச் செல்ல சாலை வரி, சுங்க வரி, எரிபொருள் வரி, விற்பனை வரி, ஜி.எஸ்.டி. வரி என்று வரிக்கு மேல் வரி செலுத்தி விவசாயிகள் வயிறும், வாழ்வும் எரிந்து இருளாகிப் போயுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.
ஓரவஞ்சனையாக செயல்பட்டு இந்திய ஒன்றியத்தை ஆண்ட காங்கிரஸ் - பாஜக அரசுகள் தமிழ்நாட்டு நதிநீர் உரிமையைத் தட்டிப்பறித்து, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கியது போதாதா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். முப்போகம் விளைந்த தமிழர் நிலத்தில், நிலத்தடி நீர் மூலம் ஒருபோகம் விளைவித்து வரும் தமிழக விவசாயிகளின் வயிற்றிலும் மோடி அரசு அடிக்க முயல்வது நியாயம்தானா என்றும் அவர் வினவியுள்ளார்.
"நிலமும், நீரும், காற்றும், ஒளியும், மழையும், மலையும், கடலும், காடும் பாஜக ஆட்சியில் சட்டம் போட்டு உருவாக்கப்பட்ட வளர்ச்சி திட்டம் அல்ல; மாய, மந்திரங்கள் சொல்லி பெற்ற வரமும் அல்ல; அவை இயற்கை அன்னை அனைத்து உயிர்களுக்கும் தந்த அருட்கொடைகள்!" என்று குறிப்பிட்டுள்ள சீமான், நீருக்கு வரி, காற்றுக்கு வரி, சூரிய ஒளிக்கு வரி என்று கண்ணில் கண்ட எல்லாவற்றிற்கும் வரி விதிப்பது அறநெறி ஆகாது என்று சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கனவே சரக்கு மற்றும் சேவை வரியால் நாட்டு மக்களை பாஜக அரசு வாட்டி வதைப்பது போதாதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
"நின்றால், நடந்தால், நாட்டு மக்களுக்கு வரி; எதை விற்றாலும் வரி; எதை வாங்கினாலும் வரி; ஆனால், நாட்டை ஆளும் ஆட்சியாளர்களுக்கு பறக்கும் விமானம் முதல் நாடாளுமன்ற உணவகத்தில் உண்ணும் உணவு வரை அனைத்திற்கும் சலுகை; இது யாருக்கான நாடு?" என்று சீமான் காட்டமாக வினவியுள்ளார்.
விவசாயிகளின் நிலை மேலும் மோசமடையும்:
ஏற்கனவே இடுபொருட்கள், விதை, உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மருந்துகளின் விலையேற்றம், வேலையாட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, புழு தாக்கம், பருவகால மாற்றம் என பல்வேறு தடைகள் சூழ்ந்து, வேளாண்மை செய்வதே விவசாயிகளுக்கு பெரும்பாடாகியுள்ளதாக சீமான் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தனை துன்பங்களையும் தாண்டி வேளாண்மை செய்து பயிர் விளைவித்தாலும், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் பெரும்பான்மையான விவசாயிகள் வேளாண்மையை விட்டே வெளியேறி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய - மாநில அரசுகள் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் விளைநிலங்களை விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பறித்தும் வேளாண்மையை அழித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
உணவிற்கு கையேந்த வைப்பதற்கான சூழ்ச்சி:
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென நெடுங்காலமாக வேளாண் பெருங்குடி மக்கள் கோரிக்கை வைத்து, போராடி வரும் நிலையில், அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத இந்திய அரசு நிலத்தடி நீருக்கு வரி விதிப்பது வேளாண்மையை முற்றாக அழிப்பதற்கே வழிவகுக்கும் என்று சீமான் எச்சரித்துள்ளார். இது வேளாண்மையை முற்று முழுதாக அழித்தொழித்து, விளைநிலங்களை விட்டு விவசாயிகளை வெளியேற்றி, அதனை கார்ப்பரேட் கைகளில் ஒப்படைத்து நாட்டு மக்களை உணவிற்கு கையேந்த வைப்பதற்கான சூழ்ச்சியே நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் கொடுந்திட்டமாகும் என்றும் அவர் சாடியுள்ளார்.
மத்திய அரசுக்கு சீமான் எச்சரிக்கை:
புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து விவசாயத்தை அழிக்க முனைந்த பாஜக அரசு, வேளாண் பெருங்குடி மக்களின் வரலாறு காணாத பேரெழுச்சிப் போராட்டம் காரணமாக வேறு வழியின்றி அதனைத் திரும்பப்பெற்றது என்றும், தற்போது அதைவிடவும் மிகப்பெரிய புரட்சியை, விவசாயிகளின் எழுச்சியினை இந்தக் கொடிய முடிவால் பாஜக அரசு எதிர்கொள்ள நேரிடும் என்றும் சீமான் எச்சரித்துள்ளார்.
ஆகவே, இந்தியப் பெருநாட்டில் மிகப்பெரிய பஞ்சத்திற்கும் - பேரழிவிற்கும் வழிவகுக்கும் வேளாண்மைக்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முடிவை பாஜக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், வரிக்கொடுமைகள் தாங்காது அல்லற்பட்டு ஆற்றாது அழும் நாட்டு மக்களின் கண்ணீரே இக்கொடிய ஆட்சியை வீழ்த்தும் பேராயுதமாகிவிடும் என எச்சரிக்கின்றேன்" என்று சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேளாண்மைக்கு பயன்படும் நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பது,
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) June 29, 2025
குழந்தை குடிக்கும் தாய்ப்பாலுக்கு வரிவிதிப்பதற்கு ஒப்பானது; இக்கொடுங்கோன்மை முடிவை பாஜக அரசு கைவிட வேண்டும்!
இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வருங்காலங்களில் வரி… pic.twitter.com/VaUzZDQtgv
வேளாண்மைக்கு பயன்படும் நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பது,
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) June 29, 2025
குழந்தை குடிக்கும் தாய்ப்பாலுக்கு வரிவிதிப்பதற்கு ஒப்பானது; இக்கொடுங்கோன்மை முடிவை பாஜக அரசு கைவிட வேண்டும்!
இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வருங்காலங்களில் வரி… pic.twitter.com/VaUzZDQtgv