ஈரோட்டில் கோலாகலமாக நடந்த சாணியடி திருவிழா..!
ஈரோடு மாவட்டத்தில் வினோத சாணியடி திருவிழா நடந்தது. அதாவது தமிழகம் - கர்நாடகா எல்லையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பீரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்த 3வது நாளில் இந்த கோவிலில் சாணியடி திருவிழா என்பது வெகுவிமரிசையாக நடக்கும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.
மேலும் கிராமத்தில் உள்ள அனைத்து பசு மாட்டு சாணங்களும் சேகரிக்கப்பட்டு கோவிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டது. அதன்பின் பீரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகத்துடன், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆண்கள் சட்டை அணியாமல் பூஜையில் பங்கேற்றனர். அதன்பிறகு சாணத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி சாணியடி திருவிழா தொடங்கியது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சட்டை அணியாமல் சாணி மீது ஏறி உருண்டை உருண்டையாக பிடித்து மற்றவர்களின் மீது வீசினர். இதில் ஈரோடு மட்டுமின்றி கர்நாடகாவை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். இந்த திருவிழாவை வெளிநாட்டினர் மற்றும் அந்த பகுதி மக்கள் ரசித்தனர். கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.
கும்டாபுரம் கிராமத்தில் உள்ள பீரேஸ்வரர் கோவிலில் 300 ஆண்டு பழமை வாய்ந்தது. இந்த கோவில் நீண்ட காலமாக சாணியடி திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவின்போது சாணத்தை உடலில் பூசுவதன் மூலம் நோய்களும் தீரும் என்பதும், இந்த சாணத்தை விவசாய நிலத்தில் பயன்படுத்தும்போது பயிர்கள் செழித்து வளரும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. இதையடுத்து இன்றைய சாணியடி திருவிழாவுக்கு பிறகு அதனை விவசாயிகள் தங்கள் நிலத்துக்கு எடுத்து சென்று பயன்படுத்தினர்.
#JUSTIN ஈரோட்டில் நடைபெற்ற விநோத சாணியடி திருவிழா
— News18 Tamil Nadu (@News18TamilNadu) November 3, 2024
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயிலில் சிறப்புப் பூஜைகளுடன் திருவிழா#Erode #Thalavadi #Cowdung #News18Tamilnadu | https://t.co/1V8D6J3Adq pic.twitter.com/ffgPujCnYG