பள்ளிகள் வேலை நேரம் மாற்றம்..! இனி காலை 6.30 மணிக்கே தொடக்கம்!

ஒடிசா மாநில பள்ளிக் கல்வித்துறை முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு காலை நேர வகுப்புகள் 6.30 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறும். இது உடனடியாக அமலுக்கு வருகிறது.
அனைத்து பள்ளிகளுக்கும் வழிகாட்டுதல்கள்
- குடிநீர் அனைத்து நேரங்களிலும் போதிய அளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- குடிநீர் வருவதற்கான குழாய்கள், பைப்களில் ஏதேனும் பழுதுகள் இருந்தால் அவற்றை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பள்ளிகளில் ஓ.ஆர்.எஸ் பாக்கெட்கள் போதுமான அளவிற்கு இருப்பு வைக்க வேண்டும். இவற்றை மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.
- பள்ளிகளில் வகுப்பறைகளுக்கு வெளியில் அரங்கேறும் நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் வெயிலின் தாக்கம் மாணவ, மாணவிகளை பாதிக்கக் கூடும்.
குடிநீர் வசதி முதல் தலைமை ஆசிரியர்கள் கண்காணிப்பு
- மாணவ, மாணவிகள் கட்டாயம் குடிநீர் பாட்டில் எடுத்து வருவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். இதையொட்டி பெற்றோர்களிடம் அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- வகுப்பறையில் பாடவேளைகளை தாண்டி கோடை வெயிலின் தாக்கம், அதிலிருந்து தப்பிக்கும் வழிகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- மேலும் வெப்பத்தின் தாக்கத்தை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நிலைமைக்கு ஏற்ப பள்ளி நேரத்தை மாற்றி அமைக்கவும் நடவடிக்கை எடுத்து கொள்ளலாம்.
அங்கன்வாடி மையங்கள் நேரமும் மாற்றம்
இதேபோல் அனைத்து அங்கன்வாடி மையங்களும் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படுவதற்கு பதிலாக, காலை 7 மணி முதல் 9 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.