விரைவு ரயில்களில் வரும் மாற்றங்கள்- தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னார்குடியில் இருந்து பகத் கி கோத்தி வரை செல்லும் மன்னார்குடி விரைவு ரயிலில் மூன்று படுக்கை வசதிக் கொண்ட இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், ஒரு பொதுப்பெட்டி குறைக்கப்படுகிறது. அதற்கு பதிலாக, ஒரு ஏசி இரண்டாம் வகுப்புப் பெட்டி, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் மூன்று இணைக்கப்படுகிறது. இந்த மாற்றம் வரும் ஜூலை 27- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ராமேஸ்வரத்தில் இருந்து ஓகா செல்லும் ராமேஸ்வரம் விரைவு ரயிலில் ஐந்து படுக்கை வசதிக் கொண்ட வகுப்புப் பெட்டிகளும், ஒரு பொதுப் பெட்டியும் குறைக்கப்பட்டு அதற்கு பதிலாக, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் ஆறு இணைக்கப்படும் என்றும், ஜூலை 28- ஆம் தேதி முதல் இந்த மாற்றம் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து மங்களூரு சென்ட்ரல் வரை செல்லும் திருவனந்தபுரம் சென்ட்ரல் விரைவு ரயிலில் ஒரு பொதுப் பெட்டி குறைக்கப்பட்டு, அதற்கு பதிலாக மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் வரும் ஜூலை 25- ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயிலில் ஐந்து இரண்டாம் வகுப்பு பெட்டிகள், ஒரு பொதுப்பெட்டி குறைக்கப்பட்டு, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் ஆறு இணைக்கப்படவுள்ளது. வரும் ஆகஸ்ட் 3- ஆம் தேதி முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது.
அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து ஜோத்பூர் செல்லும் சென்னை எழும்பூர் விரைவு ரயிலிலும் இரண்டாம் மற்றும் பொதுப்பெட்டிகள் குறைக்கப்பட்டு, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் ஆறு இணைக்கப்படுகிறது. கோவையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் கோவை விரைவு ரயிலில் நான்கு இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் குறைக்கப்பட்டு, மூன்றாம் வகுப்புக் கொண்டு நான்கு பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கோவையில் இருந்து ராஜ்கோட் செல்லும் கோவை விரைவு ரயில் பெட்டிகளிலும் மாற்றம் செய்யப்பட்டு, மூன்றாம் வகுப்புப் பெட்டிகள் நான்கு இணைக்கப்பட உள்ளது.