1. Home
  2. தமிழ்நாடு

வரலாற்று சாதனை படைத்த சந்திரயான் 3 விஞ்ஞானிகளுக்கு விருது அறிவிப்பு..!

1

நிலவின் தென் துருவத்தை எந்த நாட்டின் விண்கலமும் தொட்டது கிடையாது. ஆனால், முதல் முறையாக இந்தியா இந்த மகத்தான வரலாற்று சாதனையை படைத்தது. இந்த சாதனை ஒட்டுமொத்த மனித சமூகத்திற்குமான சாதனை என இஸ்ரோ கூறியது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதியன்று நிலவுக்கு சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. சந்திரயான் -3 விண்கலன் பூமியை 6 முறை சுற்றி 41 நாட்கள் பயணத்திற்கு பின்னர் நிலவின் தென் துருவத்தில் இறங்கி வரலாற்று சாதனையை படைத்தது. இதுவரை உலகின் எந்த ஒரு நாடும் நிலவின் தென் துருவத்தில் விண்கலனை தரையிறக்கியது கிடையாது. அப்படி இருக்கையில் சந்திரயான் வெற்றிகரமாக தரையிறங்கி ஆய்வை தொடங்கியது.

ஆய்வில் நிலவில் ஆக்சிஜன், சல்பர், அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டேனியம், மாங்கனீஸ், சிலிக்கான் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை சந்திரயான் 3 பிரக்யான் ரோவரில் இருந்த எல்ஐபிஎஸ் கருவி கண்டுபிடித்து சொன்னது. இந்தியாவுக்கு முன்னர் நிலவுக்கு ரஷ்யாவும், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளும் விண்கலன்களை அனுப்பி ஆய்வு செய்திருந்தாலும் இஸ்ரோவின் பிரிக்யான் ரோவர்தான் முதல் முதலில் நிலவில் சல்பர் இருப்பதை கண்டுபிடித்தது. இது இஸ்ரோ படைத்த இரண்டாவது சாதனை.

அதேபோல டைட்டேனியம் கண்டுபிடித்திருப்பது நிலவின் தென் துருவத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. அதாவது, இந்த தனிமம் உலகின் மிகவும் அரிதானது. பூமியில் வெறும் 0.63 சதவிகிதம் மட்டுமே இருக்கக்கூடிய தனிமம் இது. இதை கொண்டுதான் விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகள் உருவாக்கப்படுகின்றன

இந்நிலையில் சந்திரயான் 3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு 'ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார்' விருதை அறிவித்திருக்கிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.மொத்தமாக விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என 33 பேர் இந்த விருதை பெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like