1. Home
  2. தமிழ்நாடு

சொல்லி அடித்த சந்திராயன் 3 : வரலாற்று சாதனை படைத்தது : தலைவர்கள் வாழ்த்து..!

1

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க் 3 (எல்விஎம் 3) ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் கடந்த 14-ம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது, சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து உந்துவிசை கலன், லேண்டர் ஆகஸ்ட் 17 ஆம் தேதி தனித்தனியாக பிரிந்தது. தனியாக பிரிந்த லேண்டரின் உயரம் ஒவ்வொரு கட்டமாக குறைக்கப்பட்டு நிலவை நோக்கி பயணித்தது.

சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் நிலவின் தென்பகுதியில் திட்டமிட்டப்படி மாலை 6.04 மணிக்கு தரையிறங்கியது. இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து நிலவில் இந்தியா கால் பதித்தது. நிலவில் இந்தியா கால் பதித்திருப்பதை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகமாக கொண்டாடினர். இதையடுத்து சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றிருப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளை காணொளி வாயிலாக சந்தித்த பிரதமர் மோடி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இந்தியாவின் காலடி நிலவில் பதிந்திருப்பது ஒட்டுமொத்த நாட்டையும் உற்சாகமடைய வைத்துள்ளதாகவும், ஒவ்வொரு வீட்டிலும் பெருமிதம் பொங்குகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா வரலாறு படைத்ததாகவும்,  இந்தியாவின் வருங்கால வளர்ச்சியினுதயமாக இச்சாதனை திகழ்வதாகவும் பிரதமர் மோடி கூறினார். நிலவின் தென்பகுதியை தொட்டு இந்தியா சாதனை படைத்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் கிடைத்த வெற்றி. நிலவில் மனிதனை அனுப்பவதுதான் அடுத்தக்கட்ட திட்டம். இஸ்ரோ மாபெரும் சாதனை படைத்திருக்கிறது. சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் விரைவில் அனுப்பபடும் என்றார்.

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறங்கியது. உலகளவில் நிலவில் கால் பதிக்கும் 4-வது நாடு என்ற பெருமையை பெற்று மகத்தான சாதனையை இந்தியா படைத்துள்ளது. இந்நிகழ்வுக்காக அயராத முயற்சி செய்த குழுவிற்கு பாராட்டுகள். இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்கு இது ஒரு மாபெரும் பாய்ச்சல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில்,”நிலவின் தென் துருவத்தில் சந்திராயன்-3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதன்மூலம் விண்வெளியில் இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் நிலவில் கால் பதித்த நான்காவது நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. விண்வெளியில் சரித்திரச் சாதனை படைத்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், சந்திராயன்-3 திட்ட இயக்குநர் திரு. P. வீரமுத்துவேல் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். விண்வெளியில் மேலும் பல சாதனைகளைப் படைக்க எனது நல்வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துகள். நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையையும் மகிழ்ச்சியையும் உணர்கிறேன். விக்ரம் லேண்டரை சீராக தரையிறக்கியதன் மூலம் வேறு எந்த உலக விண்வெளி சக்திகளாலும் செய்ய முடியாத வெற்றியை இந்தியா படைத்துள்ளது. நமது விழுப்புரத்தைச் சேர்ந்த இஸ்ரோ தலைவர் திரு எஸ்.சோமநாத், திட்ட இயக்குநர் திரு.பி.வீரமுத்துவேல் அவர்களுக்கும், குறிப்பாக சந்திராயன் இயக்கத்தின் முன்னோடியான முன்னாள் இஸ்ரோ தலைவர் திரு.கே.சிவனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த சாதனையை சாத்தியமாக்க உதவிய மாண்புமிகு பிரதமருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல் கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ கூறுகையில்." நிலவில் இந்தியா! நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய உலகின் முதல் நாடு என்ற வரலாற்றை உருவாக்குவது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையான தருணம். இந்த அபாரமான சாதனையை நிகழ்த்தியதற்காக அனைத்து விஞ்ஞானிகளுக்கும் இந்திய அரசுக்கும் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். 
 

Trending News

Latest News

You May Like