தெலுங்கு தேசம் கட்சியை வழிநடத்த தயாராகும் சந்திரபாபு நாயுடு மருமகள்..?

தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சாலை பணிகளில் ஊழல் நடந்ததாக அவரது மகன் லோகேஷ் மீது சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இன்னும் சில மாதங்களில் ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முக்கியமான காலகட்டத்தில் சந்திரபாபு நாயுடு பொது வாழ்வில் இருந்து துண்டிக்கப்பட்டிருப்பது தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
இதனால் கட்சியை வழிநடத்த அடுத்த கட்ட முயற்சிகளை தீவிரப்படுத்தும் வகையில் என்.டி.ஆரின் மகளும், சந்திரபாபு நாயுடுவின் மனைவியுமான புவனேஸ்வரி மற்றும் அவரது மருமகள் பிராமணி ஆகியோர் தற்போது கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கியுள்ளனர். முக்கியமாக தெலுங்கு தேசம் கட்சியை வழிநடத்த போகும் முக்கியமான பொறுப்பு பிராமணி வசம் சென்றுள்ளது.
புவனேஸ்வரி மற்றும் பிராமணி இருவரும் தீவிர அரசியலில் களமிறங்க திட்டமிட்டுள்ளனர். தற்போது ஆந்திர மாநிலத்தில் நடந்து வரும் போராட்டங்களில் பிராமணி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
சந்திரபாபு நாயுடுவின் மருமகள் பிராமணி என்.டி.ராமராவின் மகன் நடிகர் பாலகிருஷ்ணனின் மகள் ஆவார். என்.டி.ஆர்.பேத்தி என்பதால் ஆந்திர மாநிலத்தில் பொதுமக்களிடையே கூடுதல் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.