இன்று ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு..!

ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த பேரவை மற்றும் பாராளுமன்ற மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம்,ஜனசேனா, பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. 175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும், 25 மக்களவைதொகுதிகளில் 21 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 சட்டப்பேரவை மற்றும் 4 மக்களவை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது.
தேர்தல் வெற்றியை உறுதி செய்ததில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு பெரும் பங்குண்டு. இவருக்கு வழங்கிய 21 பேரவை மற்றும் 2 மக்களவை தொகுதிகளிலும் தான் உட்பட தனது கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றிபெற செய்துள்ளார். இதனால் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி 164 தொகுதிகளை கைப்பற்றி ஜெகன் மோகன் ரெட்டி கட்சியை தோல்வியுற வைத்துள்ளது. எனவே பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி வழங்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இம்முறை பாஜக, ஜனசேனா கட்சியினரும் அமைச்சரவையில் இடம்பெறுவர் என்பதால் மெகா அமைச்சரவையாகஇருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில், இன்று சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இதற்காக கிருஷ்ணா மாவட்டம், கன்னவரம் அருகே உள்ள கேசரபல்லி ஐடி பார்க் மைதானத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேலானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் விஐபிக்கள் பங்கேற்கவுள்ளனர். டெல்லியில் இருந்து இன்று புதன்கிழமை காலை 10.40 மணிக்கு கன்னவரம் விமான நிலையத்துக்குச் செல்லும் பிரதமர் மோடி, பின்னர் காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.
சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் பங்கேற்பதை முன்னிட்டு உச்சக்கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக நேற்று ஆந்திர பிரதேச சட்டப்பேரவையின் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளார். விஜயவாடாவில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அம்மாநில பா.ஜ.க. தலைவர் டி.புரந்தேஸ்வரி மற்றும் ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டனர். தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா மற்றும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், தேசிய ஜானநாயக கூட்டணி தலைவராக சந்திரபாபு நாயுடுவை எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர். இந்த கூட்டத்தில் அம்மாநில பா.ஜ.க. தலைவர் டி.புரந்தேஸ்வரி மற்றும் ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஆந்திர முதல்வராக சந்திரிபாபு நாயுடுவை தேர்வு செய்ய ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் முன்மொழிந்தார். இதனை அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒருமனதாக ஏற்றுக்கொண்ட நிலையில், கவர்னர் அப்துல் நசீரை சந்தித்து ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயுடு உரிமை கோரினார். அவருடன் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணும் கவர்னரை சந்தித்தார்.