தினசரி கூலித் தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தப்படும் - சந்திரபாபு நாயுடு..!
ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் அடித்துத் தூள் செய்து அசுர பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைத்தார் சந்திரபாபு நாயுடு. அவரின் அசகாய அசுர வெற்றி தேசிய அரசியல் களம்வரை பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் 5 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட தலைவரால் ஆளப்பட்டதாகவும், அவரது ஆட்சியில் மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும் விமர்சித்துள்ளார். கோதபேட்டா தொகுதிக்கு உட்பட்ட வனப்பள்ளியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் நாயுடு பேசுகையில் ஜெகன்மோகன் ரெட்டியை இவ்வாறு குற்றம்சாட்டி பேசி உள்ளார்.
அவர் மேலும் பேசியதாவது: மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஜெகன்மோகன் ரெட்டி விரும்பினார். ஆனால் அப்படி அவர் வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.
மாநிலத்தையும், அனைத்து கிராம பஞ்சாயத்துகளையும் முன்னேற்றுவது எங்கள் கடமை. பஞ்சாயத்துகளை முன்னேற்றுவதற்காக ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக ரூ.1,100 கோடி ஒதுக்கீடு செய்ய உள்ளோம். கடந்த ஆட்சியில் தெருவிளக்குகள் திருடப்பட்டன. ஆனால் நாங்கள் இப்போது வீணாகும் பொருட்களில் இருந்தும் வட வருமானத்தை உருவாக்க முயற்சி எடுத்து இருக்கிறோம்.
தினசரி கூலித் தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தப்படும். தேர்தலுக்கு முன்பாக ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தருவதாக உறுதி அளித்து இருந்தோம். வனப்பள்ளி கிராமத்தில் 600 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும். அனைத்து பகுதிகளுக்கும் சாலை வசதி செய்து தரப்படும். இலவச கேஸ் சிலிண்டர்கள் அனைத்து தரப்பினருக்கும் விரைவில் விநியோகிக்கப்படும்.
கிட்டத்தட்ட சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகளில் 40% முடிந்துவிட்டது. அனைத்து கிராமங்களிலும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் சாலை வசதி ஏற்படுத்தப்படும் என்று பேசினார்.