கங்கனா ரனாவத்துக்கு சண்டிகர் நீதிமன்றம் நோட்டீஸ்..!
முன்னாள் பிரதமர் இந்திரா நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தியபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வரலாற்றை மையமாகக் கொண்டு எமர்ஜென்சி என்ற பெயரில் படத்தைத் தயாரித்து பிரபல நடிகை கங்கனா ரனாவத் இயக்கி உள்ளார். செப்டம்பர் 6ம் தேதி படத்தின் ரிலீஸ் தேதி என்று அறிவிக்கப்பட்டது. படத்தில் சீக்கிய சமூகத்தைத் தவறாகச் சித்தரித்ததாகப் பெரும் சர்ச்சை எழுந்த நிலையில் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் வழக்கறிஞர் ரவீந்தர் சிங் பாசி, படத்தில் சீக்கியர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயன்றதாகக் கூறி மனு தாக்கல் செய்தார். ‘சீக்கியர் சமூகத்திற்கு எதிரான பல பொய்யான குற்றச்சாட்டுகள் படத்தில் இடம் பெற்றுள்ளன எனக் கூறி ரனாவத் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் கூறினார். இதையடுத்து, கங்கனா ரனாவத்துக்கு சண்டிகர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கை டிசம்பர் 5ம் தேதி மீண்டும் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.
இதற்கிடையே, ‘இன்று, சென்சார் போர்டு தேவையற்ற அமைப்பாக மாறிவிட்டது. திரையரங்குகளில் வர வேண்டிய இந்தப் படத்துக்காக எனது தனிப்பட்ட சொத்தைப் பணயம் வைத்துள்ளேன். இப்போது ரிலீஸ் ஆகாததால், சொத்து விற்றாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ எனக் கங்கனா வருத்தம் தெரிவித்துள்ளார்.