ராகுலுக்கு சவால்..! நீங்க அதைச் செய்து காட்டினால் ராஜினாமா செய்வேன்..!
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கடந்த வாரம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி., யுமான ராகுல், ஜம்மு, காஷ்மீருக்கு இருந்த மாநில உரிமை பறித்து விட்டதாகவும், முதல்முறையாக ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதாகக் கூறினார். மேலும், துணைநிலை கவர்னர் தான் ஜம்மு காஷ்மீரை இயக்குவதாகவும், இங்குக் கவர்னர் மூலமாக மன்னராட்சி நடத்தப்படுவதாகக் குற்றம்சாட்டினார். ஜம்மு காஷ்மீரில் உள்ள வளங்கள், செல்வங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் வெளியாட்களுக்கே வழங்கப்படுவதாகவும், இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருந்தார்.
அவரது இந்தப் பேச்சுக்கு ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-ராகுல் ரகசிய கணக்கெடுப்பு நடத்தினாலும் சரி, கடந்த 5 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் மக்கள் நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது என்று 75 சதவீதத்திற்கு அதிகமான மக்கள் கூறவில்லை எனில், நான் பதவியை ராஜினாமா செய்கிறேன்.
அண்மையில் நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் அதிக சதவீத வாக்குகள் ஜம்மு காஷ்மீரில் பதிவானது. கடந்த 35 ஆண்டுகள் தேர்தல் வரலாற்றிலேயே, இந்த முறை தான் 58.46 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர். பாகிஸ்தானின் உள்ளடி வேலைகளை மக்கள் நன்கு புரிந்து கொண்டனர். இனி இந்தியாவுடன் தான் தங்களின் எதிர்காலம் என்று அவர்களுக்குத் தெளிவு கிடைத்திருப்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுகின்றன. ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு, அதிலும் குறிப்பாகப் பள்ளத்தாக்கு பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உண்டாகியுள்ளது, எனக் கூறினார்.