மத்திய அரசின் செயல் ஏற்புடையதல்ல : ஓபிஎஸ் கடும் கண்டனம்!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த சூழலில் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலையை50 ரூபாய் உயர்த்தி இருப்பதும், பெட்ரோல், டீசல் விலையினை குறைக்காமல் இருப்பதும் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
கச்சா எண்ணெய் உற்பத்திக்கேற்ப தேவை அதிகரிக்காததன் காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது என்ற அவர், “சர்வதேச விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலைகள் குறைக்கப்பட வேண்டும். ஆனால், கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஒரு சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்த்தியுள்ளது பேரதிர்ச்சியை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.
அதேபோல பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து விலை வீழ்ச்சியின் பயனை பொதுமக்களுக்கு அளிக்காமல், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை இரண்டு விழுக்காடு மத்திய அரசு உயர்த்தி இருப்பது மக்களிடையே ஆற்றொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
பெட்ரோலிய பொருள்களின் விலை உயர்த்தப்படும்போது எல்லாம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் என்ற வாதத்தை எடுத்து வைத்து விலை ஏற்றத்தை நியாயப்படுத்தும் மத்திய அரசு, விலை வீழ்ச்சி ஏற்படும்போது அதை மக்களுக்கு அளிக்காமல் இருப்பது எந்தவிதத்திலும் ஏற்புடையதல்ல என்றும் ஓபிஎஸ் குற்றம்சாட்டினார்.
மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து கொண்டே வருவதைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப கேஸ் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.