ஆக்சிஜன் ஸ்டாக் வச்சுக்கோங்க.. மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்..!

48 மணி நேரத்திற்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை கையிருப்பில் வைத்துக் கொள்ள, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1.94 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், ஒமைக்ரான் தொற்றும் தீவிரமாக பரவி வருகிறது. ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலர்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், குறைந்தபட்சம் 48 மணி நேரத்திற்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். திரவ நிலை மருத்துவ ஆக்சிஜனை தங்கு தடையின்றி எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.