எதிர் நீச்சல் நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்!!

திரைப்பட இயக்குநர் மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்த மாரிமுத்து, இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். டப்பிங் பணியின் போதே திடீர் மாரடைப்பு ஏற்பட்டத்தில் மரணம் நிகழ்ந்திருக்கிறது. இவரது திடீர் மறைவு தமிழகத்தின் சினிமா மற்றும் சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை சீரியல்லான ‘எதிர் நீச்சல்’ அவரை வெகுவாய் ரசிகர்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்தது. தனது இயல்பான நடிப்புக்கு அப்பால் வசனங்களை வெளிப்படுத்தும் பாங்கிலும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றிருந்தார். மீம்ஸ்களில் இடம்பெறும் அளவுக்கு மாரிமுத்து உச்சரிப்பிலான வசனங்கள் பலவும் பிரபலமடைந்திருந்தன.
எதிர்பாராத வகையிலான மாரிமுத்து மறைவு குறித்து திரையுலக பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஷாலும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, " வாழ்கை கணிக்க முடியாத ஒன்று. என்னுடன் நடித்த சக நடிகரும், இயக்குனரும் மற்றும் நல்ல மனிதருமான மாரிமுத்து, தற்போது இல்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது. அவர் இயக்குனராக இருந்து, நடிகராக மாறும் சமையத்தில் இருந்தே அவரை எனக்குத் தெரியும். அவரது குடும்பத்தினருக்கு, அவரின் மறைவை ஏத்துக்குவதற்கான மனவலிமையை கடவுள் வழங்க வேண்டும் என வேண்டிகொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் கார்த்தியும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். " மாரிமுத்து அவர்கள் நேருக்கு நேர் படத்தில் துணை இயக்குநராக இருந்த பொழுது சந்தித்திருக்கிறேன். மிகவும் திறமையான நபர். எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும், மிக யதார்த்தமாக நடித்துவிடுவார். அவரின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
நடிகர் பிரசன்னா " மாரிமுத்துவும் நானும் கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் படத்தில் ஒன்றாக பணிபுரிந்துள்ளோம். அவரது வாழ்கை அவ்ளோ எளிதானது அல்ல. ஒரு நடிகராக, சிறந்து விளங்கி கொண்டிருந்த சமயத்தில் இவ்வாறு நடந்திருக்க கூடாது. போயிட்டு வா அப்பு!" என பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் " ஆழ்ந்த இரங்கல். உங்களுடன் பணிபுரிந்த நாட்கள் ஞபாகம் வருகின்றது" என பதிவிட்டுள்ளார்.