மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு..!

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் ஜாமீன் கிடைக்காத நிலையில் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி இருந்தார். கடந்த 2022ல் இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த வழக்கில் மேல்மட்ட விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்குப் பிறகு, முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது வழக்கை சிபிஐக்கு மாற்றிச் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. தற்போது, கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இத்தனை காலம் அதிமுக தலைவர்கள் மீதான வழக்குகளை டெல்லி கண்டுகொள்ளவில்லை. ஆனால் இப்போது திடீரென சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.