1. Home
  2. தமிழ்நாடு

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகத்தில் நடைபெற்ற சி.பி.சி.ஐ.டி. சோதனை நிறைவு..!

1

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் மீது ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்தது தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து  வருகிறார்கள். 

கரூரை அடுத்த வாங்கல் குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கடந்த மாதம் 25-ம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் உள்பட 3 பேர் சேர்ந்து தனது ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து அபகரித்து விட்டதாக கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதையடுத்து இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் எனக் கூறி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் அவரது தம்பி சேகர் ஆகியோர் கரூர் மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனிடையே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. 

இதையடுத்து கரூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து தலைமறைவான முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் மற்றும் அவரது தம்பி உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி காலை எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் கரூர், மதுரை, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்ட சி.பி .சி .ஐ .டி போலீசார் சோதனை நடத்தினர். 

வழக்கில் தொடர்புடைய  யுவராஜ், ரகு, செல்வராஜ், மாரப்பன் வீடுகளில் சோதனை நடைபெற்றது. இதனிடையே இந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி ஆகியோரின் மனுவை நேற்று முன்தினம் இரவு மாவட்ட அமர்வு நீதிபதி தள்ளுபடி செய்தார். 

இதை தொடர்ந்து நேற்று கரூரில் உள்ள எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது தம்பி ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.சி.ஐ.டி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, கரூர் உள்பட 8 இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

சென்னையில் அபிராமபுரம் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட சுந்தரம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எம்.ஆர்.விஜய பாஸ்கரன் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் ரம்யா தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினார்கள். கரூர் - கோவை ரோடு என்.எஸ்.ஆர் நகர் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அருகில் உள்ள நூல் குடோன், ரெயின்போ நகரில் உள்ள சாயப்பட்டறை அலுவலகம், ரெயின்போ அப்பார்ட் மெண்டில் உள்ள அவரது தம்பி சேகர் வீடு ஆகிய இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தினர்.

இதேபோல் கரூர்,  கோவை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அலுவலகம், திரு.வி.க சாலையில் உள்ள எம்.ஆர்.வி. டிரஸ்ட் அலுவலகம், ராமானுஜம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்றது. ஒரே நாளில் மொத்தம்  8 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. 

7 குழுக்களைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகத்தில் சி.பி.சி.ஐ.டி. நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது. 8 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் சில ஆவணங்கள்  கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தற்போது சோதனை நிறைவு பெற்றுள்ளது. 

Trending News

Latest News

You May Like