இன்று நடைபெறுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்..!

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழகத்துக்கு நவம்பர் 15-ம் தேதி வரை விநாடிக்கு 2600 கன அடி நீர் திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் தமிழகத் துக்கு காவிரி நீர் திறந்து விட முடியாதென்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறினார்.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டம் அதன் தலைவர்எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று (3-ம் தேதி) டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அதிகாரிகளுக்கு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் வினாடிக்கு 13,000 கன அடி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடவேண்டும் என வலியுறுத்த இருப்பதாக தெரிகிறது. கர்நாடக அரசு தரப்பில்அணைகளின் நீர் இருப்பு நிலவரத்தை எடுத்துரைத்து அதனை மறுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல மேகேதாட்டுஅணை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கிடையே டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திற்கு பிறகு தமிழகத்திற்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த நீரை திறந்துவிட ஆணையம், கர்நாடகாவிற்கு உத்தரவு பிறபிக்குமா என்பது தெரியவரும்.
இதற்கிடையே மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதால் நீர்மட்டம் குறைந்தது. இதனால் கடந்த மாதம் 10-ந் தேதியுடன் பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது. நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 52.73 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2899 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் குடிநீருக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 30-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் நவம்பர் 1-ம் தேதி முதல் 15-ந் தேதி வரை கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2600 கனஅடி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவுப்படி நேற்று முன்தினம் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை. அதே போல் 2-வது நாளாக நேற்றும் தண்ணீர் திறக்கவில்லை.
கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 244 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே போல் கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 505 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 567 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது.