காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் குடகு பகுதியில் மோசமான மழை பெய்யும் - தமிழ்நாடு வெதர்மேன்..!
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெயில் கொளுத்தினாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்யும் மழையால் இதமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.மேலும் குளிர்ந்த காற்றுடன் அவ்வப்போது தூறல் மற்றும் லேசான மழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், மழை நிலவரம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், துாமலை, திருப்பத்தூர், கடலூர், புதுச்சேரி , சுருக்கமாக முழு வட தமிழகத்திலும் ஊட்டி போன்ற க்ளைமேட்டுடன் தூறல் மற்றும் லேசான மழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளார். மறுபுறம் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருக்கும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மற்றும் கேரள மாநிலத்தில் கனமழை எதிர்பார்க்கப்படுவதாகவும் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பந்தலூர், தேவாலா, நீலகிரியில் அவலாஞ்ச் மற்றும் கோவை மாவட்டத்தின் வால்பாறை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கன்னியாகுமரி மற்றும் பெரியாறு அணை பகுதி, தேனி மாவட்டத்தின் தேக்கடி மற்றும் நெல்லை மாவட்டத்தின் மாஞ்சோலை பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் மழை மறைவு பகுதியில் டமால் டுமீல்ஸ் பிரேக் என்றும் காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் குடகு பகுதியில் மோசமான மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார். மும்பை முதல் கேரளா வரை மேற்கு கடற்கரை முழுவதும் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள அனைத்து அணைகளும் இன்னும் 10 நாட்களில் முழு நீர்மட்டத்தை எட்டும் என்றும் மேட்டூர் அணை பெரும் நீர்வரத்துக்கு தயாராக வேண்டும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
.png)