இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தேதி அறிவிப்பு - மத்திய அரசு..!

2027ஆம் ஆண்டு நடத்தப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும் என்பதை தற்போது மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்ட அரசிதழில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் சென்சஸ் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் இந்த தேதியில் சென்சஸ் தொடங்கப்படும் என்றாலும், சில பகுதிகளில் வானிலை சார்ந்த பிரச்னைகள் இருக்கும் என்பதால் அந்த பகுதிகளில் மட்டும் சென்சஸ் வேறு தேதியில் தொடங்குகிறது.
ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், பனி அடர்ந்த ஜம்மு காஷ்மீர் பகுதிகள், லடாக் போன்ற பகுதிகளில் 2026ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து சென்சஸ் பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பிற பகுதிகளில் தொடங்குவதற்கு 5 மாதங்களுக்கு முன்னரே இங்கு சென்சஸ் தொடங்கிவிடும். முன்னரே சொன்சஸ் தொடங்கும் இடங்களில் வானிலை சாதகமாக இருக்கும் காலகட்டங்களிலேயே கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. எனவே, கணக்கெடுப்பை எவ்வித சிரமமும் இன்றி, மக்களை எளிதாக அணுகும் விதத்திலும் இருக்கும்.
2 கட்டங்களாக நடைபெறும் சென்சஸ்
மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. வீட்டுவசதி பட்டியல் செயல்பாட்டில் தொடங்கி, ஒவ்வொரு வீட்டிற்கும் அந்த வீட்டு நிலைமைகள், சொத்துக்கள் மற்றும் வசதிகள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படும். இதைத் தொடர்ந்து மக்கள்தொகை கணக்கெடுப்பு (PE) இரண்டாம் கட்டமாக நடைபெறும். இதில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒவ்வொரு தனிநபரைப் பற்றிய சமூக-பொருளாதார, கலாச்சார மற்றும் பிற தொடர்புடைய விவரங்கள் சேகரிக்கப்படும். இதில் சாதிவாரி கணக்கெடுப்பு அடங்கும்.
டிஜிட்டல் முறையில் சென்சஸ்
சுமார் 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள், 1.3 லட்சம் சென்சஸ் அதிகாரிகள் அடங்கிய ஒரு பெரிய குழு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளது. இந்தியாவில் சென்சஸ் தொடங்கப்பட்டதில் இருந்து இது 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும், சுதந்திர இந்தியாவில் இது 8வது முறையாகும்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு செயல்முறையை மிக துல்லியமாகவும், வசதியானதாகவும் மாற்ற இது மொபைல் செயலிகள் மூலம் டிஜிட்டல் முறையில் நடத்தப்படும். கூடுதலாக, சுய-கணக்கெடுப்பு ஆப்ஷன்களும் பொதுமக்களுக்குக் கிடைக்கும். இதனால் தனிநபர்கள் தங்கள் தகவல்களை நேரடியாக வழங்க முடியும்.