முந்திரி விலை கடும் உயர்வு..!
பண்ருட்டி சுற்றுவட்டார கிராமங்களான சாத்திப்பட்டு, மாம்பட்டு, விசூர், பணிக்கங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 32 ஏற்றுமதி சார்ந்த முந்திரி உற்பத்தி அலகுகள்(Production Units), 250 செயலாக்க அலகுகள்(Processing Units) மற்றும் 500-க்கும் மேற்பட்ட குடிசைத் தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில், இந்தாண்டு கொளுத்திய கோடை வெயில் காரணமாக முந்திரி பூக்கள் கருகியதால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டதன் எதிரொலியால், முந்திரி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
உள்நாட்டில் விளைச்சல் இல்லாததாலும் முந்திரி கொட்டைகள் இருப்பு இல்லாத காரணத்தாலும் தட்டுப்பாடு ஏற்பட்டு முன் எப்போதும் இல்லாத வகையில் பண்ருட்டியில் முந்திரி விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது.
விளைச்சல் குறைந்ததால் வழக்கமாக ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்று வந்த ஒரு மூட்டை(80 கிலோ) முந்திரி கொட்டைகள் தற்போது 12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.
முந்திரி கொட்டை விலை ஏற்றத்தால், பண்ருட்டி குடிசைத் தொழில் வியாபாரிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். விவசாயிகளிடம் அதிக விலை கொடுத்து முந்திரி கொட்டைகளை வாங்கும் குடிசைத் தொழில் வியாபாரிகள், சுத்தம் செய்து முந்திரி பயிர்களாகவும் அதை தரம் பிரித்து விற்பனையில் ஈடுபடுவதில் உரிய விலை கிடைக்காததால் பாதிப்படைந்துள்ளனர்.