கோவை உக்கடம் மேம்பாலத்தில் பறக்கவிடப்பட்ட பாலஸ்தீன கொடி..!

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 7ஆம் தேதி, மோதல் தொடங்கியது. இரு தரப்பிலும் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக, பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் செய்து வரும் செயல் சர்வதேச விதிகளை மீறும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
இதனிடையே பாலஸ்தீனயர்களுக்கு ஆதரவாகவும், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்தும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 24-ந் தேதி கோவை உக்கடம் பகுதியில் அனைத்து ஜமாத், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பு மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தில் அனைத்து ஜமாத்தை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.
போராட்டம் நடைபெற்ற இடத்தையொட்டி புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போராட்டத்தின் போது சிலர், மேம்பாலத்தின் மீது பாலஸ்தீன கொடியை கட்டி இருந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவியது.
இதையடுத்து உக்கடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பின் மாவட்ட செயலாளர் சபீர் அலி, மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த அபுதாகீர், ரபீக் ஆகிய 3 பேர் பாலஸ்தீன கொடியை மேம்பாலத்தின் மீது கட்டியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் சபீர் அலி, அபுதாகீர், ரபீக் ஆகியோர் மீது சட்டத்திற்கு புறம்பாக ஒன்று கூடுதல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.