தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு..!

தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மாவட்டச் செயலாளர்கள் மூன்று கட்டங்களாக அறிவிக்க உள்ளதாக தெரிவித்து, முதற்கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்களை அறிவித்த நிலையில் இரண்டாம் கட்டமாக இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் 19 மாவட்ட செயலாளர்களை அறிவித்திருக்கிறார். இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பில் மதுரை மாநகர் தெற்கு மாவட்ட கழகத்தின் மாவட்ட செயலாளராக மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த SR.தங்கப்பாண்டி என்பவரை கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் வெளியிட்டார்.
இந்த நிலையில் மாவட்ட செயலாளராக அறிவித்த SR.தங்கபாண்டி நேற்று மாலை மதுரை வந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் மற்றும் மதுரை மாநகர் தெற்கு மாவட்ட கழக தொண்டர்கள் அவரது வீட்டில் இருந்து செல்லூர் 60 அடி சாலையில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகம் வரை மேளதாளம் முழங்க காரில் ஊர்வலமாக அழைத்துவந்து பட்டாசு வெடித்து மாலை அணிவித்து கையில் வீரவாள் வழங்கி அலுவலகத்தின் முன்பு கொண்டாடி மகிழ்ந்தனர். இதனால் அந்த பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு காவல்துறையினர் வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் பொது மக்களுக்கு இடையூறு, அனுமதி இன்றி கூட்டம் கூடியது, மாநகர பகுதியில் அனுமதி இன்றி டிரோன் கேமரா பறக்கவிட்டது, சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்தது என தமிழக வெற்றிக்கழக தெற்கு மாவட்ட செயலாளர் தங்கபாண்டி உட்பட தவெக நிர்வாகிகள் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் செல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக மாவட்ட தலைவர் தங்கபாண்டியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் உற்சாக வரவேற்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்த நிர்வாகிகளால் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் உட்பட தாவக மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.