பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடிய எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!!

சென்னையில் நேற்று நள்ளிரவு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடிய பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் உள்ளிட்ட 7 பேர் மீது ஐஸ்ஹவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராயப்பேட்டை சைவ முத்தையா தெருவில் தந்தை பெரியார் திராவிடக் கழகம் சார்பில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 67ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட இந்த கொண்டாட்டத்தில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன் கலந்துகொண்டார்.
மேலும் தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்ட செயலாளர் குமரன் என்ற டிங்கர் குமரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்சென்னை மாவட்ட பொருளாளர் குமரப்பா, தமிழக வாழ்வுரிமை கட்சி துணை பொது செயலாளர் வேணுகோபால், திருவல்லிக்கேணி பகுதி திமுக தலைவர் செழியன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைமைக் குழு உறுப்பினர் வெங்கட் கொற்றவை, கருப்பர் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் நாத்திகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அனுமதி பெறாமல் கொண்டாட்டம் நடத்தப்பட்டதாக எம்எல்ஏ வேல்முருகன் உள்ளிட்ட 7 பேர் மீது ஐஸ்அவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 143-( சட்டவிரோதமாக கூடுதல்), 269- (உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயை பரப்பக்கூடிய செயலில் ஈடுபடுதல்), 285- (தீ பற்றக்கூடிய பொருட்கள் கவனக்குறைவாக கையாளுதல்), 290- (பொதுதொல்லை கொடுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
newstm.in