முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மீது வழக்கு பதிவு: 125 சதவீதம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு!

சேவூர் ராமச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் இன்று (மே 17) காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி மணிமேகலை, மகன்கள் விஜயகுமார், சந்தோஷ் குமார் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் 2016 முதல் 2021 வரை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக பதவி வகித்தவர் சேவூர் ராமச்சந்திரன். தற்போது அவர் ஆரணி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
இவர் அமைச்சராக பணியாற்றிய காலத்தில் சட்டத்திற்கு புறம்பாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் வேலூர், திருவண்ணாமலை பகுதிகளில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சேவூர் ராமச்சந்திரன் வீடு மற்றும் அவரது மகன்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அவர் வருமானத்திற்கு அதிகமாக 125 சதவீதம் சொத்து சேர்த்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது 8 கோடி ரூபாய் அளவுக்கு அவர் சொத்து சேர்த்தது உறுதிபடுத்தப்பட்டது. இதனால் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சேவூர் ராமச்சந்திரன் மட்டுமல்லாமல் அவரது மனைவி மற்றும் மகன்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது நடைபெறும் சோதனை நாளை வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. சோதனையின் முடிவில் கைப்பற்றப்படும் பணம், நகை, ஆவணங்களை தொடர்ந்து விசாரனை அடுத்தகட்டத்துக்கு நகரும்.