நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய உத்தரவு!
தேர்தல் பத்திரங்கள்மூலம் மிரட்டிப் பணம் பறித்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிகர் சங்கர்ஷ் பரிஷத் (ஜேஎஸ்பி) இணைத் தலைவர் ஆதர்ஷ் ஐயர், பெங்களூருவில் உள்ள பொதுப் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தக் கோரி புகார் அளித்திருந்தார். தேர்தல் பத்திரங்கள்மூலம் மிரட்டிப் பணம் பறிப்பதாக அவர் புகார் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள்மூலம் மிரட்டிப் பணம் பறித்த குற்றத்துக்காக எஃப்ஐஆர் பதிவு செய்யத் திலக் நகர் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. நிர்மலா சீதாராமன், வருமான வரித்துறை அதிகாரிகள், ஜேபி நட்டா, பாஜக தேசிய தலைவர்கள், நளின் குமார் கட்டீல், முன்னாள் பாஜக கர்நாடகா தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா உள்ளிட்டோர் மீது ஜனாதிகர் சங்கர்ஷ் பரிஷத் 42வது ஏசிஎம்எம் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளது. அதில், ஏப்ரல் 2019 முதல் ஆகஸ்ட் 2022 வரை, தொழிலதிபர் அனில் அகல்வாலின் அமைப்பிலிருந்து சுமார் ரூ.230 கோடி, அரவிந்தோ பார்மசியிலிருந்து தேர்தல் பத்திரங்கள்மூலம் ரூ.49 கோடி பணம் பெறப்பட்டுள்ளதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரைப் பரிசீலித்த நீதிமன்றம், பெங்களூரு திலக் நகர் போலீசாரிடம் எப்ஐஆர் பதிவு செய்து அதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
நில முறைகேடு புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என அம்மாநில பாஜக வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், பண பறிப்பு வழக்கை எதிர்கொள்ளும் நிர்மலா சீதாராமன் முதலில் பதவி விலகுவாரா? அவரை முதலில் பதவியிலிருந்து நீக்குங்கள், பின்பு நான் ராஜினாமா செய்கிறேன் என, சித்தராமையா தெரிவித்துள்ளார்.
வழங்குநரின் விவரங்களை வெளியிடாமல் அரசியல் கட்சிகள் நிதி பெறும் வசதியை, தேர்தல் பத்திரங்கள் வழங்கியது. ஆனால், இந்தச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானதாக இருப்பதாகக் கடந்த பிப்ரவரி 15ம் தேதி, தேர்தல் பத்திர முறையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. பாஜக தலைமையிலான மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட இச்சட்டம், ரத்து செய்யப்பட்டது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வகிக்கும், நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.