சாலையோரம் இரவில் அனாதையாக நின்ற கார்.. போலீசார் அதிர்ச்சி.. பெண்ணுக்கு வலை !

சென்னை அடுத்த ஆவடி அருகேயுள்ள பாலவேடு ஏ.என்.எஸ் நகரில் டாஸ்மாக் கடை பக்கத்தில் கார் ஒன்று அனாதையாக நின்றது. இரவு வெகு நேரமாகியும் அந்த கார் நின்று கொண்டிருந்தது குறித்து, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கார் கதவை திறந்து உள்ளே சோதனை செய்தனர். அப்போது, காரில் சந்தேகப்படும் படி ஒரு பிளாஸ்டிக் சாக்கு மூட்டை ஒன்று இருந்தது.
அதில் பிளாஸ்டிக் கவரில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வகையில் அந்த காரில் 7 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, போலீசார் காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்து முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணையை தொடங்கினர். அதில் சென்னை, பாடிபுதுநகரை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான கார் என தெரியவந்தது.
பின்னர் அந்நபரை பிடித்து விசாரித்தப்போது, அந்த காரை கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஏஜென்சி மூலம் திருத்தணியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு விற்று விட்டதாக கூறினார்.
இதனையடுத்து, போலீசார் தலைமறைவாக உள்ள அந்த பெண்ணை தேடி வருகின்றனர். காரில் கஞ்சாவை கடத்தி போலீசாருக்கு பயந்து அங்கேயே விட்டுவிட்டு சென்றாரா?, அல்லது காரை கடத்திய மர்மநபர்கள் கஞ்சாவை கடத்தினரா எனவும் விசாரணை நடத்தப்படுகிறது.
newstm.in