கேப்டன் விஜயகாந்தின் புதிய பங்களா ரெடி..!
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைந்து ஒரு வருடம் நிறைவடைந்ததை தொடர்ந்து, கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் கடந்த சனிக்கிழமையன்று குருபூஜை நடைபெற்றது. விஜயகாந்த் தனது கடைசிக் காலம்வரை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில்தான் வாழ்ந்துவந்தார்.
அந்த வீடு மிக ஆடம்பரமான வசதிகள் இல்லாமல் இருந்ததால், போரூரிலிருந்து பூந்தமல்லி போகும் நெடுஞ்சாலையில் உள்ளது காட்டுப்பாக்கம் ஆட்கோ நகர் பகுதியில் ஒரு மாளிகை போன்ற வீட்டைக் கட்டி வந்தார். இதனைக் கடந்த 2013இல் இருந்து 2023 வரை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாகக் கட்டி வந்தார்.
அவரது மறைவின்போது இந்த வீட்டின் பணிகள் 50%தான் முடிந்திருந்தது.
ஆனால், இப்போது ஒரு வருடத்திற்குள் அந்த வீட்டில் பல்வேறு வேலைகள் முடிந்து மிகப் பிரம்மாண்டமாகக் காட்சி தருகிறது. இந்த வீடு மொத்தம் 20 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இதைப் பார்க்கவே ஏதோ ஒரு மல்டிபிளக்ஸ் தியேட்டர் போன்ற தோற்றத்தில் காட்சி தருகிறது.
விஜயகாந்த் அரசியலில் வளர்ந்து வந்த காலத்திலேயே அவரது எதிர்கால அரசியலை மனதில் வைத்து இதனைக் கட்டத் திட்டமிட்டுள்ளனர் அவரது குடும்பத்தினர். வீட்டின் முன்பாகச் சுமார் 1000 நபர்கள் கூடி நிற்கும் அளவுக்கு இடவசதி, தொண்டர்களை வீட்டின் முகப்பிலிருந்து பார்த்துக் கையசைக்க ஏதுவாக விசாலமான மேல்மாடம் வசதியென இந்தப் பங்களா ஜகஜோதியாக இருக்கிறது.
அதேபோல் வீட்டின் வரவேற்பறை ஏதோ எம்.ஜி. ஆர் படங்களில் வரும் சினிமா மாளிகைபோல் உள்ளது. முதல் மாடியில் உள்ள அறைகளுக்கு அதன் வழியே கீழிறங்கி வருவதற்காக அகலமான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தில் இரண்டு மாடி உயரத்திற்குக் கண்ணாடி அமைக்கப்பட்டு அதன் வெளிச்சம் வீட்டின் உள்ளே இறங்குவதைப் போன்று உள்ளது.
இந்த வீட்டின் உள்ளே நுழைந்த உடனேயே தொண்டர்களைச் சந்திப்பதற்காகப் பெரிய அறை ஒன்றும் உள்ளது. அதன் அருகிலேயே ஒரு பூஜை அறை உள்ளது. இதுவும் பெரியதாகவே இருக்கிறது. அடுத்து ஒரு வெற்றிடம். அதனைக் கடந்து போனால் தாஜ்மஹால் அளவுக்கு ஒரு அகண்ட ஹால். அதிலிருந்து முதல் மாடிக்குச் செல்ல இருபுறமும் படிக்கட்டுகள். அங்கே பல அறைகள். அதில் ஒன்று ஹோம் தியேட்டர். பலர் உட்கார்ந்து படம் பார்க்கலாம்.
இந்த வீடு முழுக்க சென்ட்ரலைஸ்டு ஏசி அமைக்கப்பட்டுள்ளது. படிக்கட்டுகளில் விஜயகாந்த்தினால் ஏறி இறங்க முடியாது என்பதால் லிஃப்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையிலும் உள்ள கழிவறையே 500 சதுர அடி இருக்கும். அதில் உள்ளே இறங்கிக் குளிக்கத் தனியே தொட்டி ஒன்றும் உள்ளது. இது ஒரு டூப்ளக்ஸ் பங்களா டைப்பில் உள்ளது. முதல் மாடியிலிருந்து வீட்டின் முகப்பில் உள்ள பால்கனிக்கு வரலாம். அங்கே இருந்து தொண்டர்களைப் பார்த்துக் கையசைக்கலாம். அப்படியான முன்னேற்பாடுகளுடன் பங்களா கட்டப்பட்டு வருகிறது.
பால்கனி இருக்கிறது, பங்களாவும் இருக்கிறது. அவரது கட்சித் தொண்டர்களும் இருக்கிறார்கள். இந்தப் புதிய வீட்டில் நின்று அவர்களைப் பார்த்துக் கையசைக்க விஜயகாந்த் தான் உயிரோடு இல்லை. அவர் பார்த்துப் பார்த்து உருவாகி வந்த இந்த வீட்டில் அவர் குடியேறுவதற்கு முன்பே விடைபெற்றுச் சென்றுவிட்டார்.
இந்தப் பகுதியில் உள்ள மக்கள் அந்த வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது கட்டுமான பணிகள் தொடங்கி இருக்கின்றன. இடையில் விஜயகாந்த் உடல்நிலை மோசமாக மாறியதால் வீட்டின் வேலைகளில் தேக்கம் உருவாகி இருந்தது. அவரது மறைவுக்குப் பின் கடந்த ஒரு வருடத்திற்குள் முக்கால்வாசி வேலைகள் முடிந்துள்ளன. வரும் 2025 பிரேமலதா விஜயகாந்த் இந்த வீட்டில் குடியேறிவிடுவாரென அங்குள்ள பணியாளர்கள் சொல்கிறார்கள்.