1. Home
  2. தமிழ்நாடு

கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர் - பிரதமர் மோடி புகழாரம்..!

1

 2006 சட்டமன்றத் தேர்தலில் தனித்து 234 தொகுதிகளுக்கு வேட்பாளரை நிறுத்தினார் நடிகர் விஜயகாந்த் 10 சதவிகிதம் வரை வாக்குகள் வாங்கி தனது முத்திரையை அழுத்தமாக பதித்தார். அத்துடன், விருத்தாச்சலம் தொகுதியில் வென்று சட்டமன்றம் சென்றார்.மக்களுடனும் தெய்வத்தோடும் கூட்டணி என சொல்லிவந்த விஜயகாந்த் 2011ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தார்.  2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றார். அந்த தேர்தலில் வென்று பிரதமராக வந்த நரேந்திர மோடி விஜயகாந்தின் உழைப்பை பாராட்டி பேசினார்.

2016ஆம் ஆண்டுக்குப் பிறகு விஜயகாந்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுங்கினார். கட்சியை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன், சுதீஷ் ஆகியோர் வழிநடத்தினர். 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றது. இதனிடையே உடல்நலக் குறைவால் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விஜயகாந்த் காலமானார். விஜயகாந்துக்கு மறைவுக்குப் பிறகு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

இந்த சூழலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி கணக்குகள் தற்போதே தொடங்கிவிட்டன. அதிமுக - பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த், “பிரதமர் மோடி விஜயகாந்த் இடையில் இருந்த உறவு அரசியலைத் தாண்டியது. அவரது உடல்நலக் குறைபாடுகள் போது ஒரு சகோதரரைப் போல கவலைப்பட்டு, அடிக்கடி விசாரித்தார்” என்று தெரிவித்து இருந்தார். மேலும் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார்.

இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, “எனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர். நானும், அவரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக கலந்துரையாடியதுடன், இணைந்து பணியாற்றியும் இருக்கிறோம்” என்று தெரிவித்தார். மேலும், சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள் என்றும் பிரதமர் புகழாரம் சூட்டினார்.


 


 

Trending News

Latest News

You May Like