இன்று டெல்லியில் கேப்டன் விஜயகாந்திற்கு பாராட்டு விழா..!

மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் பிரேமலதா விஜய்காந்த், விஜய பிரபாகரன், சுதீஷ் ஆகியோரும் தேமுதிக நிர்வாகிகள் சிலரும் டெல்லி ராஷ்டிரபதி பவனுக்கு சென்று விருது பெற்றிருந்தார்கள்.
விருது பெறுவதற்கு முன்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்து நெகிழ்ச்சி ததும்ப பேசினார் பிரேமலதா விஜயகாந்த். அப்போது பேசிய அவர், "கேப்டன் இல்லை என்கிற மிகப்பெரிய வலி இருக்கிறது.. இருந்தாலும் மத்திய அரசால் தரப்படும் இந்த உயரிய விருது வாங்குவதில் ஒட்டுமொத்த தேமுதிகவும் பெருமை அடைகிறோம்..
இந்த விருதை நம்முடன் இல்லை என்றாலும் கேப்டனுக்கு நேரடியாக சமர்ப்பிக்கவிருக்கிறோம். அது மட்டுமல்லாது அவரை விரும்பிய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் தேமுதிக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் கேப்டனின் இந்த உயரிய விருதான பத்மபூஷன் விருதை சமர்ப்பிக்கிறோம்..
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டில் இரவு உணவை உண்ண அழைப்பு வந்திருக்கிறது. இது எங்களுக்கு மட்டுமல்லாது பத்ம விருதுகள் வாங்கிய அனைவருக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும், டெல்லியில் இருக்கும் தமிழ் சங்கம் சார்பாக கேப்டனுக்கு மிகப்பெரிய பாராட்டு விழா நடக்கவிருக்கிறது.. இந்த பாராட்டு விழாவிலும் கலந்துகொண்டு அதன்பிறகு சென்னை திரும்புகிறோம்.. சென்னை திரும்பியது பேரணியாக திரண்டு கேப்டனின் கோவிலில் இந்த விருதை அவரது காலடியில் வைத்து அவர்களுக்கான மரியாதை செலுத்த இருக்கிறோம்" என நெகிழ்ந்து பேசினார் பிரேமலதா விஜயகாந்த்.