சஸ்பெண்ட் செய்தாலும் குரலை ஒடுக்க முடியாது! டெல்லியில் எம்.பிக்கள் போராட்டம்!

நாட்டில் அசாதாரண நிலை நிலவி வரும் நிலையிலும் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தன. இதனையடுத்து ராஜ்யசபாவில் 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
எம்.பிக்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் ராஜ்யசபாவிலிருந்து வெளிநடப்பு செய்தன. தலைவரின் இருக்கையும் , மைக்கும் உடைக்கப்பட்டன். மசோதாக்களின் நகல்கள் கிழித்து எறியப்பட்டன. துணைத் தலைவரின் மீது தாக்குதல் நடத்தவும் முயற்சிசெய்யப்பட்டது.
இதனையடுத்து 8 எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்திலேயே விடிய விடிய அமர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த எம்.பி.க்களுக்கு ராஜ்யசபா துணைத் தலைவர் இன்று காலை டீ கொடுத்து உபசரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை எம்.பிக்களின் செயல்பாடுகளுக்கு மட்டுமே எதிரானது. பலமுறை கேட்டுக் கொண்டும் எம்.பிக்கள் தங்களது இருக்கைக்கு திரும்பவில்லை. அதனாலேயே இந்த முடிவு சரியே என விளக்கம் அளித்தார். மேலும் முன்னாள் பிரதமர் தேவகவுடா, எம்.பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
எங்களை சஸ்பெண்ட் செய்யலாம். எங்கள் குரலை ஒடுக்க முடியாது என சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.