காதலிக்கிறார்கள் என்பதற்காக மட்டுமே உடலுறவுக்கு சம்மதித்ததாக கருத முடியாது.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

கேரளாவின் காயம்குளத்தைச் சேர்ந்தவர் சியாம் சிவன் (26). இவர் தனது காதலியான 17 வயது சிறுமியை வற்புறுத்தி காயம்குளத்தில் இருந்து ஆலப்புழா மற்றும் பெங்களூரு அழைத்துச் சென்றார். அப்போது, பெங்களூருவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதன் பிறகு, அந்த சிறுமியை கோவாவுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஒரு ஹோட்டலிலும் வைத்து பலாத்காரம் செய்துள்ளார். அத்துடன், சிறுமியின் தங்க நகைகளை விற்றுள்ளார். ஒரு வாரம் கழித்து காயம்குளம் திரும்பியதும், அந்த சிறுமியிடம் 50 ரூபாய் கொடுத்து, பின்னர் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து அனுப்பி வைத்துள்ளார்.
மாதங்கள் பல கடந்தும், சிறுமியை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை பரிசீலித்த நீதிமன்றம், கற்பழிப்பு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது.
நீதிபதி ஆர்.நாராயண பிஷாரடி தனது தீர்ப்பில், “பெண், ஆணைக் காதலிக்கிறார்கள் என்பதற்காக மட்டும் உடலுறவுக்கு சம்மதம் தெரிவிக்க முடியாது. ஒப்புதல் மற்றும் சமர்ப்பணத்திற்கும் வேறுபாடு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டப்பட்டவரை காதலித்தார் என்ற காரணத்திற்காக, அவர் உடலுறவுக்கு சம்மதம் தெரிவித்ததாக கருத முடியாது” எனக் கூறினார்.