1. Home
  2. தமிழ்நாடு

உங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 கிடைக்குமா..? விண்ணப்பத்தில் உள்ள கேள்விகள் இது தான்..!

1

சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், 'பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்' என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், இந்த திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் ரூ.7 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், வரும் செப்டம்பர் 15-ந் தேதியில் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்தினம் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்த திட்டத்துக்கு "கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்" என்று பெயர் சூட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகளை தமிழக அரசு வரையறை செய்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதில் பெண்கள், தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில்தான் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்று பல்வேறு தகுதிகள் வரையறுக்கப்பட்டு உள்ளன. ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு கீழ் இருக்கும் குடும்பத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் என்றும் கூறப்பட்டு உள்ளது.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு தகுதியானவர்கள் என்பதை ஆய்வு செய்யும் பணியும் தொடங்கி உள்ளது.அதற்காக கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஒவ்வொரு குடும்பத்தின் ரேஷன் அட்டையையும் ஆய்வு செய்து தனி பட்டியல் தயாரிக்க உள்ளனர். அதன் மூலம் தகுதியான பயனாளிகளை எளிதாக கண்டுபிடிக்க முடியும். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்காக ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனி எண்களுடன் விண்ணப்பம் தயாரித்து கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த விண்ணப்பங்கள் அச்சடிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

விண்ணப்ப படிவங்கள் அச்சடித்து முடித்ததும் அவை ரேஷன் கடைகளுக்கு அனுப்பிவைக்கப்படும். அங்கு அவர்கள் அந்த விண்ணப்ப படிவங்களை சரி பார்த்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் தனித்தனியாக பிரிப்பார்கள். இதற்காக குழுக்கள் அமைக்கப்படும். பொதுவாக ஒவ்வொரு ரேஷன் கடைக்கு உட்பட்ட பகுதிகளில் 600 முதல் ஆயிரம் ரேஷன் அட்டைகள் இருக்கும். ரேஷன் கடைகளில் எந்த பொருளும் வேண்டாம் என்று எழுதி கொடுத்திருப்பவர்களுக்கு விண்ணப்பம் தரப்படாது. மற்ற அட்டைதாரர்களுக்கு வீடு தேடி சென்று விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்படும். அந்த விண்ணப்பத்தில் ரேஷன் அட்டை எண்களும் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதோடு டோக்கன் ஒன்றும் வழங்கப்படும். அதில் எந்த தேதியில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து திருப்பி கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். ரேஷன் கடை முகாம்களில் பெண்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் கூட்டமாக திரள்வதை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே பெண்கள் ரேஷன் கடைகளுக்கு கூட்டமாக வந்து விண்ணப்பங்களை கொடுக்க வேண்டியது இல்லை. குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து திருப்பி கொடுக்க வேண்டும்.

ஜெராக்ஸ் செல்லாது
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 பெறுவதற்கு தங்களுக்கு தகுதி இருக்கிறதா? இல்லையா என்பதை தெரிந்து கொள்ள முடியும். எனவே விண்ணப்ப படிவங்கள் பெற்றதும் அதை குடும்ப தலைவிகள் கவனமாக படித்து பார்த்து பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் பெறப்பட்டதும் அவை ஆய்வு செய்யப்படும். மாத உரிமைத்தொகை பெற எந்தெந்த விண்ணப்பதாரர்களுக்கு தகுதி இருக்கிறது என்பது அதன் அடிப்படையில் முடிவு செய்யப்படும். ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் விண்ணப்பத்தை மற்ற பெண் பயனாளிகள் பயன்படுத்த முடியாது. ஏனெனில் ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் ஒரு எண் வழங்கப்பட்டு இருக்கும். எனவே ஒரு விண்ணப்பத்தை ஜெராக்ஸ் எடுத்து அதை மற்றவர்கள் பயன்படுத்த இயலாது. எந்த பொருளும் வேண்டாம் என்று எழுதி கொடுத்திருப்பவர்களில் யாராவது உரிமைத்தொகை பெற விரும்பினால் அவர்களும் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம். அது ஆய்வு செய்யப்படும்.

இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த நடைமுறைகள் தொடங்கப்படும். விண்ணப்பிக்க உரிய அவகாசம் இருப்பதால் யாரும் அவசரப்பட்டு ரேஷன் கடைகளுக்கு கும்பலாக வர தேவை இருக்காது. வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் பெண்கள் மட்டும் இந்த வாய்ப்பை மிக எளிதாக பெற வாய்ப்பு உள்ளது. அரசே ஒவ்வொரு வீட்டுக்கும் விண்ணப்பத்தை அச்சடித்து கொடுப்பதால் இதில் இடைத்தரகர்கள் செயல்பட முடியாது. உண்மையான பயனாளிகள் மட்டுமே பயன்பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

விண்ணப்பத்தில் உள்ள கேள்விகள்
 

இந்த திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டு உள்ளது. கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப படிவத்தில் கருணாநிதி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப்படங்களுடன் தமிழக அரசின் இலச்சினை இடம்பெற்றிருக்கிறது. அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களின் விவரம் வருமாறு:-

பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை சமர்ப்பிக்கும்போது ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகிய ஆவணங்களை எடுத்துவர வேண்டும் என்பதை முக்கிய வரியாக படிவத்தில் இடம்பெற்றிருக்கிறது. இந்த விண்ணப்ப படிவத்தில் ஆதார் எண், பெயர், ரேஷன் அட்டை எண், திருமணம் பற்றிய (ஆனவரா, இல்லையா) தகவல், தொலைபேசி எண், வாடகை வீடா அல்லது சொந்த வீடா, மின் இணைப்பு எண், வங்கி மற்றும் கிளை பெயர், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டு உள்ளன. மேலும் குடும்ப உறுப்பினர்கள், அவர்களது தொழில், மாத வருமானம், வருமான வரி செலுத்தும் நிலை உள்ளிட்ட சொத்து விவரங்கள் கேட்கப்பட்டிருக்கின்றன.

அதேபோல சொந்த வீடு உள்ளதா? அதற்கு அரசு திட்டத்தின் மூலமாக நிதியுதவி பெறப்பட்டதா? குடும்ப உறுப்பினர்களிடம் சொந்தமாக நிலம் உள்ளதா?, நன்செய் நிலமா, புன்செய் நிலமா? 5 ஏக்கருக்கு மேல் உள்ளதா? 10 ஏக்கருக்கு மேல் உள்ளதா? கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் உள்ளதா? போன்ற கேள்விகளும் கேட்கப்பட்டு உள்ளன. 

உறுதிமொழி

படிவத்தில் இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரர் உறுதிமொழிகள் வருமாறு:-

* மகளிர் உரிமைத்தொகை பெற எனது ஆதார் எண், பயோமெட்ரிக் அல்லது ஒரு முறை கடவுச்சொல் (ஓ.டி.பி.) தரவை ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்புக்காக வழங்க நான் இதன் மூலம் ஒப்புக்கொள்கிறேன்.

* எனது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திற்கு மேல் இல்லை.

* எனது குடும்ப உறுப்பினர்கள் யாரும் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திற்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் அல்ல.

* எனது குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர் யாரும் இல்லை.

*எனது குடும்பத்தில் மாநில அரசு, மத்திய அரசு ஊழியர்கள் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் யாரும் இல்லை.

* எனது குடும்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி வார்டு உறுப்பினர்களைத் தவிர) யாரும் இல்லை.

* எனது குடும்பத்தில் யாரும் சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கவில்லை.

* எனது குடும்பத்தில் ஆண்டுக்கு ரூ.50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் யாரும் இல்லை.

* எனது குடும்பத்தில் முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லை.

* எனது குடும்ப உறுப்பினர்களுக்கு கூட்டாக 5 ஏக்கர் நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் இல்லை.

* விண்ணப்பத்தில் என்னால் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மை. தவறான தகவல்களைக் கொடுத்து மகளிர் உரிமைத்தொகை பெற்றது கண்டறியப்பட்டால், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறிவேன்.

இவ்வாறு 11 உறுதிமொழிகள் இடம்பெற்றுள்ளன.

Trending News

Latest News

You May Like