ஒரு கொசு விரட்டியால் ஒரு குடும்பமே பலியானது என்று சொன்னால் நம்ப முடிகிறதா ?
சென்னை மாத்தூர் எம்எம்டிஏ பகுதியை சேர்ந்தவர் உடையார். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதிக்கு பிரியதரிதா, சங்கீதா ஆகிய 2 மகள்கள் இருந்தனர். உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வரும் உடையார், இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காயமடைந்தார். இதையடுத்து அவர் கீழ்ப்பாக்கம் கே.எம்.சி., மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செல்வி, தனது கணவருக்கு துணையாக மருத்துவமனையில் தங்கியுள்ள நிலையில், மகள்களை அவரது தாயார் சந்தானலட்சுமி கவனித்து வந்தார். இரவு உடையாரின் மகள்கள் மற்றும் அவரது தங்கை மகள் பவித்ரா பாட்டியுடன் வீட்டில் படுத்து உறங்கியுள்ளார். அப்போது வீட்டில் கொசு விரட்டுவதற்காக போடப்பட்டிருந்த மின்சார கொசுவிரட்டி தீப்பற்றி உருகி, அருகில் இருந்த அட்டைப்பெட்டிகளில் பட்டு தீ பரவியது.
தொடர்ந்து வீடு முழுவதும் புகை சூழ்ந்து நச்சுவாயு வெளியேறிய நிலையில், 3 சிறுமிகளும், மூதாட்டியும் தூக்கத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று காலை உடையாரின் சகோதரி அவர்களை எழுப்ப சென்றபோது வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து மாதவரம் பால் பண்ணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த மாதவரம் பால் பண்ணை போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சிறுமிகள் 3 பேரும், மூதாட்டியும் உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.