அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களை பெண்கள் அணியலாமா?
இந்த மாதம் முழுவதும் பக்தியுடன் அம்மனிடம் எது கேட்டாலும், அது கிடைக்கும் என்பது ஐதீகம். அம்மனுக்கு சாற்றப்படும் சேலை, அணிகலன்கள், வளையல்கள் என்று ஒவ்வொன்றும் தனித்துவமான பலன்களை கொடுக்கக்கூடியது. இதில் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களை பெண்கள் அணியலாமா? இப்படி அணிந்து கொண்டால் என்ன கிடைக்கும்? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் தொடர்ந்து இந்த பதிவில் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம். ஆடிப்பூரம் அன்று அம்பிகைக்கு வளைகாப்பு நடத்தி நிறைய வளையல்களை போடுவார்கள். பூஜை முடிந்ததும் அந்த வளையல்களை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுப்பார்கள். இப்படி கொடுக்கப்படும் வளையலை அணிந்து கொண்டால் திருமண தடை உள்ளவர்களுக்கு திருமண பாக்கியம் உண்டாகும் என்றும், குழந்தை பாக்கிய தடை இருப்பவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கர்ப்பிணி பெண்கள் இந்த வளையலை வாங்கி அணிந்து கொண்டால் சுகப்பிரசவம் நடக்கும் என்றும் நம்பப்படுகிறது.
ஆடிப்பூரம் மட்டுமல்ல ஆடி மாதத்தில் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களை, நீங்கள் பிரசாதமாக கேட்டு வாங்கி அணிந்து கொண்டாலும் நிறைய பலன்கள் கிடைக்கும். வளையல் என்பது பெண்களின் நேர்மறையான சக்திகளை ஈர்த்து தரக்கூடிய ஒரு எளிய அணிகலனாகும். அம்மனுடைய வளையலை ஒரு பெண் அணிந்து கொள்வதால், அவளுடைய ஆன்மா சுத்தமடைகிறது. தீராத நோய்களும் தீர்ந்து, மன உளைச்சலில் இருந்து வெளியேறி, மன அமைதி கிடைக்கும் என்பது நியதி.
ஆடி மாதத்தில் கோவிலுக்கு சென்று அம்பாளுக்கு சாற்றப்படும் கண்ணாடி வளையல்களில் இருந்து கேட்டு வாங்குங்கள். அப்படி உங்களுக்கு கொடுக்கப்படும் வளையல் பச்சை நிறமாக இருந்தால், நீங்கள் வேண்டிய வரம் வேண்டிய படி கிடைக்க இருப்பதாக நம்பிக்கை கொள்ளலாம். எந்த வேண்டுதல் நீங்கள் அம்பாளிடம் வைத்திருந்தாலும், அதற்கு அம்பாள் பச்சைக்கொடி காட்டியதாக அர்த்தம். அடுத்து சிகப்பு நிற வளையல் வந்தால் மங்கலம் உண்டாகப் போகிறது என்பது அர்த்தம்.
ஆரஞ்சு வர்ண வளையல் கிடைத்தால் பக்தி அதிகரிக்க போகிறது, கடவுளுடைய அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது என்று அர்த்தம். நீல நிற வளையல்கள் கிடைத்தால் நீண்ட கால நோய்கள் எல்லாம் தீர்ந்து போகும் என்பது நம்பிக்கை. மற்ற எந்த வண்ண வளையல்கள் வாங்கினாலும் நினைத்தது நடக்க கடும் முயற்சி எடுக்க வேண்டும் என்று அர்த்தம். அம்பாளை முழுமையான பக்தியுடனும், நம்பிக்கையுடனும் பூஜித்து வாருங்கள், நினைத்ததெல்லாம் விரைவில் கைகூடும். வளையல்கள் எப்பொழுதும் நேர்மையான ஆற்றல்களை ஈர்த்து தரக்கூடியது. கை நிறைய வளையல்களை அணிந்து கொண்டு விளக்கு ஏற்றும் பெண்களுக்கு, அதிர்ஷ்டம் வீடு தேடி வரும். ஆடி மாதத்தில் வளையல்கள் அணியாமல் இருக்காதீர்கள்.