1. Home
  2. தமிழ்நாடு

சச்சினுக்கு அலுவலக உதவியாளர் வேலை கொடுக்க முடியுமா? - நீதிமன்றம் சரமாரி கேள்வி !

சச்சினுக்கு அலுவலக உதவியாளர் வேலை கொடுக்க முடியுமா? - நீதிமன்றம் சரமாரி கேள்வி !


மதுரை மாவட்டம் துவரிமானை சேர்ந்த மதுரேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், இந்தியாவிலுள்ள சிறப்புத்திறன் (அறிவுத்திறன் குறைந்த) மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களையும் பரிசுகளும் பெற்றுள்ளேன்.

மத்திய, மாநில அரசுகள் இவர்களை ஊக்குவித்து ரொக்கப் பரிசை வழங்கி வருகிறது. ஆனால் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இணையாக இவர்களுக்கு பரிசுகளும் வேலைவாய்ப்பும் வழங்கப்படுவது இல்லை. எனவே தமிழகத்தில், சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து சலுகைகளையும், ஒரே மாதிரி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுக்கு காட்டமாக பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

சச்சினுக்கு அலுவலக உதவியாளர் வேலை கொடுக்க முடியுமா? - நீதிமன்றம் சரமாரி கேள்வி !

மனுதாரர் மாநில அளவிலும் உலக அளவிலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம், வெள்ளி உட்பட பல்வேறு பதக்கங்களையும் வென்றுள்ளார். இருப்பினும் அவரை தமிழக அரசு அலுவலக உதவியாளராக நியமனம் செய்துள்ளது.

இதேபோல பத்தாம் வகுப்பு படித்துவிட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா? விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் மாற்றுத் திறனாளிகளை உலக நாடுகள் வெகுவாக பாராட்டி கொண்டாடுகின்றன. ஆனால் தமிழகத்தில் இந்த வீரர்களை கொண்டாடுவது கிடையாது. இது போன்ற நிலையை ஒருபோதும் ஏற்க முடியாது.

சச்சினுக்கு அலுவலக உதவியாளர் வேலை கொடுக்க முடியுமா? - நீதிமன்றம் சரமாரி கேள்வி !

தமிழகத்தை காட்டிலும் மற்ற மாநிலங்களான தெலுங்கானா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விளையாட்டு வீரர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், அவர்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் அவர்களை ஊக்கப்படுத்துவற்கான நடவடிக்கைகளை அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது. ஆனால் தமிழகத்தில் 90 க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்ற மாற்றத்திறனாளி ஒருவருக்கு பத்தாவது மட்டுமே படித்துள்ள காரணத்தால் அலுவலக உதவியாளர் பணி கொடுத்துள்ளனர்.

எந்த விளையாட்டு என்பது முக்கியமல்ல. அவர்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி மாற்றுத்திறனாளி ஒருவர் விளையாட்டில் சாதித்து இருக்கிறார் என்பதே முக்கியம். விளையாட்டுத் துறையில் சாமானியர்கள், ஏழை எளிய வீரர்கள் சாதிப்பதற்காக தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அரசால் எவ்வளவு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகளை பார்க்கும் போது தமிழகத்தில் மூன்று ஸ்டார்களுக்கு மட்டுமே மதிப்பு இருப்பதாக தெரிகிறது. ஒன்று அரசியல் ஸ்டார், இன்னொன்று சினிமா ஸ்டார், மற்றொன்று கிரிக்கெட் ஸ்டார்.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளது எனவும், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படும் அரசு உதவித்தொகை விவரம் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு என்ன திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன எனவும், சிறப்பு குழந்தைகளுக்கு உள்ள திட்டங்கள் என்ன என்பது குறித்தும் வரும் 29 தேதி மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like