மக்களின் பிரதிநிதியாக இருக்கும் எம்.எல்.ஏ இப்படி செய்யலாமா ? வாக்காளரை அடிக்கலாமா ?
ஆந்திராவில் மொத்தம் உள்ள மக்களவைத் 25 தொகுதிகளுக்கும், 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி - தெலுங்கு தேசம் பாஜக ஜனசேனா -காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளும் என 3 அணிகள் சட்டமன்ற தேர்தலில் களம் காண்கின்றன.
நீண்ட வரிசையில் காத்திருந்து பெண்கள் முதியவர்கள் இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே கடும் மோதல் வெடித்து வருகிறது. சில இடங்களில் அடிதடி சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன.
இந்த நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவை வாக்காளர் ஒருவர் கன்னத்தில் பளார் என அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தெனாலி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருக்கும் அன்னப்பத்துணி சிவகுமார் இன்று தனது வாக்கினை செலுத்துவதற்காக குண்டூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தெனாலி சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்றார்.
இவர் தனது வாக்கை செலுத்த வரிசையில் நிற்காமல் நேரடியாக வாக்குச்சாவடிக்குள் சென்றுள்ளார். அப்போது வரிசையில் நின்ற வாக்களார் ஒருவர் வரிசையில் நின்று வாக்களிக்க மாட்டீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் கோபமடைந்த எம்.எல்.ஏ. சிவகுமார் அந்த வாக்காளர் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டுள்ளார். அதன் பின்னர் வாக்காளரும் பதிலுக்கு எம்.எல்.ஏ. சிவகுமார் மீது அறை விட்டுள்ளார். இதனையடுத்து எம்.எல்.ஏ. சிவகுமாரின் ஆதரவாளர்கள் அந்த வாக்காளரை கடுமையாக தாக்கினர். இச்சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒய்எஸ்ஆர் குண்டர்கள் எப்படி மக்களை தாக்குகிறார்கள் பாருங்கள் என தெலுங்கு தேசம் கட்சியினர் இந்த வீடியோவை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பி வருகின்றனர்
.