தேவை இல்லாமல் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படும் நபருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடலாமா? - உயர்நீதிமன்றம் பரபர கேள்வி!
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவை அனைத்தும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சிவஞானம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட நபர்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கலாமா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக விளக்கம் அளிக்க அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
அதன்படி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான அசன் முகமது ஜின்னா, “இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. ஆனால், இது ஒவ்வொரு வழக்கிற்கும் மாறுபடும்” என்று கருத்து தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தேவையில்லாமல் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவதாகவும், அப்படி தேவை இல்லாமல் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படும் நபருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடலாமா என்றும் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அசன் முகமது ஜின்னா, அவ்வாறு எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம் என்று கோரிக்கையை நீதிபதிகளிடம் வைத்தார். மேலும், தேவையில்லாமல் குண்டர் சட்டத்தை பயன்படுத்தக்கூடாது என ஏற்கனவே டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.
இதனையடுத்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கு பதிலாக மாற்று வழிகளை கண்டுபிடிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், “பொதுமக்கள் அச்சமின்றி காவல் நிலையத்தை அணுக வேண்டிய சூழலை உருவாக்க வேண்டும்” என்றும் கருத்து தெரிவித்தனர்.