மிசோரம், சத்தீஸ்கரில் பிரச்சாரம் ஓய்ந்தது : நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு..!

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்கள் வரும் 7-ம் தேதி தொடங்கி, வரும் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. தொடர்ந்து டிசம்பர் 3-ம் தேதி 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்றைய தினம் எந்த கட்சி, எந்த மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் அல்லது தக்கவைக்கும் என்பது தெரிந்துவிடும்.
ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களானது, அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய அரையிறுதி போட்டி என்பதால், ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து தேர்தலை எதிர்கொண்டுள்ளன.
இந்நிலையில் மிசோரமில் மொத்தமுள்ள 40 தொகுதிக்கும், சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதியில் முதற்கட்டமாக 20 தொகுதிக்கும் நாளை (நவ. 7) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்தது.
ஐந்து மாநிலங்களிலும் மொத்தமுள்ள 679 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், அந்தந்த தொகுதி மக்களின் மனநிலை என்ன என்பது குறித்து ஏ.பி.பி. மற்றும் சி-வோட்டர் நிறுவனங்களின் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
அதன்படி மிசோரமில் மொத்தமுள்ள 40 இடங்களில் ஆளும் எம்.என்.எப். 17 முதல் 21 இடங்களிலும், காங்கிரஸ் 6 முதல் 10 இடங்களிலும், இசட்.பி.எம். 10 முதல் 14 இடங்களிலும், மற்றவை 2 இடங்களிலும் வெல்லும். அதன்படி அங்கு ஆளும் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 45 முதல் 51 இடங்களிலும், பா.ஜ.க. 36 முதல் 42 இடங்களிலும், மற்றவை 2 முதல் 5 இடங்களையும் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்பின்படி காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது.
மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் 118 முதல் 130 இடங்களிலும், பா.ஜ.க. 99 முதல் 111 இடங்களிலும், மற்றவை 2 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இங்கு பா.ஜ.க. ஆட்சியை பறிகொடுக்க வாய்ப்புள்ளது. காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது.
ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 இடங்களில் காங்கிரஸ் 67 முதல் 77 இடங்களிலும், பா.ஜ.க. 114 முதல் 124 இடங்களிலும், மற்றவை 5 முதல் 13 இடங்களிலும் கைப்பற்றும். இங்கு ஆளும் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுக்கும். பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புள்ளது.
தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 இடங்களில் காங்கிரஸ் 43 முதல் 55 இடங்களிலும், பா.ஜ.க. 5 முதல் 11 இடங்களிலும், ஆளும் பி.ஆர்.எஸ். 49 முதல் 61 இடங்களிலும், மற்றவை 4 முதல் 10 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது. ஆளும் பி.ஆர்.எஸ். கட்சி – காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
5 மாநிலங்களிலும் மொத்தமுள்ள 679 இடங்களில் காங்கிரஸ் 279 முதல் 323 இடங்களிலும், பா.ஜ.க. 254 முதல் 288 இடங்களிலும், எம்.என்.எப். 17 முதல் 21 இடங்களிலும், இசட்.பி.எம். 10 முதல் 14 இடங்களிலும், பி.ஆர்.எஸ். 49 முதல் 61 இடங்களிலும், மற்றவை 11 முதல் 32 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
ஒட்டுமொத்த கருத்துக் கணிப்பை பார்க்கும் போது, மத்திய பிரதேசத்தில் காங்கிரசும், ராஜஸ்தானில் பா.ஜ.க.வும் ஆட்சியை கைப்பற்றும். சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்கும். தெலுங்கானாவில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. மிசோரமில் ஆளுங் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.