அமைச்சரவை மாற்றம் உதயநிதிக்கு ஏற்றமாகவும், துரைமுருகனுக்கு ஏமாற்றமாகவும் இருக்கும் - தமிழிசை..!
ஒவ்வொரு முறையும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது முதல்வர் ஸ்டாலினிடம் தவறாமல் கேட்கப்படும் கேள்வி, ‘அமைச்சரவை மாற்றம் இருக்குமா, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி எப்போது’ என்ற கேள்விதான். பல்வேறு வார்த்தைகளில் கேள்விகள் முன் வைக்கப்பட்ட போதிலும் ஒவ்வொரு முறையும் முதல்வர் ஸ்டாலின் அளித்த பதிலால் தி.மு.க., விலும், உதயநிதி ஆதரவாளர்கள் தரப்பிலும் எதிர்பார்ப்பு கூடிக் கொண்டு வருகிறது.
இன்றைய லேட்டஸ்ட் செய்தியாளர்களின் சந்திப்பிலும் கூட முதல்வர் ஸ்டாலின் சொன்னது இதுதான்: அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்பதுதான். அவரின் சூசகமான பதில், உதயநிதி விரைவில் துணை முதல்வர் ஆவது உறுதி என்பதையே சொல்கிறது என்று உதயநிதி ஆதரவாளர்கள் குஷியாக இருக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பேட்டிகுறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பதிலளித்து வருகின்றனர். பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசையும் இதற்குப் பதில் அளித்துள்ளார்.
அவர் கூறி உள்ளதாவது; யார் ஏமாற போகின்றனர் என்பது அமைச்சரவை மாற்றத்தின்போது தெரியும். முதல்வர் கூறிய மாற்றம் துரைமுருகன் போன்றோருக்கு ஏமாற்றமாகவும், உதயநிதிக்கு ஏற்றமாகவும் இருக்கும்.
தி.மு.க., வில் பல்வேறு மூத்த நிர்வாகிகள் இருக்கும்போது வாரிசு அரசியலை முன்னெடுப்பது சரியா?
இவ்வாறு தமிழிசை கூறி உள்ளார்.