மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை : நீலகிரிக்கு தேர்தல் அறிக்கை வெளியிட்டார் எல்.முருகன்..!

உதகையில், திரைப்பட படப்பிடிப்பு, பிந்தைய தயாரிப்பு பணிகளுக்கான, ‘திரைப்பட நகரம்’ அமைப்பதோடு, உலக திரைப்பட விழாக்கள் நடத்தப்படும். உதகையில் சர்வதேச தரத்தில் ‘ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையம்’ உருவாக்கப்படும். உதகை காந்தல் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும். மின் இணைப்பு இல்லாத குடியிருப்புகளுக்கும் மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைவருக்கும் சுகாதாரமான சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்ட மக்களுக்கான வேலை வாய்ப்பினை உறுதி செய்யும் விதமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள HPF தொழிற்சாலையானது நவீன தொழிற் பூங்காவாக (IT Park) அமைத்து தரப்படும். மேட்டுப்பாளையம் – கோவை ரயில் இருப்புப்பாதை இரட்டை வழி பாதையாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உதகை நகர் பகுதியில் சுற்றுலா வாகனங்களுக்கு மல்டி லெவல் பார்க்கிங் வசதி அமைக்கப்படும்.
தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நிலக்கடலை, பாக்கு மற்றும் செங்காம்பு கறிவேப்பிலைக்கு புவிசார் குறியீடு பெற்று ஏற்றுமதியை ஊக்குவித்து, உரிய விலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். படுகர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழங்குடியினர் இன பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரியில் சுற்றுச்சூழல் பாதிப்பின்றி சுற்றுலா மையம், உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்கப்படும்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் முகாம் அலுவலகம் திறக்கப்படும். அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மகளிருக்கு தனி கல்லூரி அமைக்கப்படும். உதகையில் மூடப்பட்ட எச் பி எஃப் தொழிற்சாலையில் ஐடி பூங்கா திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரியில் ஏர் ஆம்புலன்ஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மேட்டுப்பாளையம், அவிநாசி, சத்தியமங்கலம், உதகை ஆகிய பகுதிகளில் அதிநவீன கால்நடை மருத்துவமனைகள் அமைத்து தரப்படும். வெற்றி பெற்ற 500 நாட்களில் 59 வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்” என்பன உள்ளிட்ட 59 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை பாஜக வேட்பாளரும், மத்திய இணையமைச்சருமான எல்.முருகன் வெளியிட்டார்.