1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் அமல் : பஸ், புறநகர் ரயில், மெட்ரோ, கேப் பயணத்திற்கு ஒரே மொபைல் ஆப்!

1

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் 2-வது ஆணையக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் சென்னைப் பெருநகரப் பகுதிக்கான 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதுடன் சென்னை பெருநகருக்கான ஒருங்கிணைந்த கியூஆர் கோடு பயணச்சீட்டு மற்றும் பயணத் திட்டமிடல் செயலியை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

சென்னைப் பெருநகரப் பகுதிக்கான (5.904 சதுர கி.மீ.) விரிவான போக்குவரத்து திட்டம் 2023-2048. 'மக்களும் பொருட்களும் தங்கு தடையின்றி ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த, நிலையான, பாதுகாப்பான மற்றும் நெகிழ்வான போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பை ஏற்படுத்துதல்' என்ற தொலைநோக்குப் பார்வையுடன், நகர்ப்புற போக்குவரத்து முயற்சிகளை முன்னெடுத்து செல்லும் வகையில் இந்த புதிய செயலி அமைகிறது.

இதன் மூலம் விரிவான போக்குவரத்து திட்டம் மூலம் பயண நேரத்தை மற்றும் பயண செலவைக் குறைத்தல், நம்பகமான, விரைவான பொதுப் போக்குவரத்தை வழங்குதல், பல்வகை பொதுபோக்குவரத்தை ஒருங்கிணைத்து வலுப்படுத்துதல், குறைந்த போக்குவரத்து உமிழ்வு மற்றும் பயணத்தேவை மேலாண்மையை ஊக்குவித்தல் போன்றவை கண்காணிக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய 'சென்னை ஒன் மொபைல் செயலியை' முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த செயலி பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது.

இதன் மூலம் பொதுமக்கள் பஸ்கள், மெட்ரோ மற்றும் புறநகர் ரெயில்களின் நிகழ்நேர இயக்கத்தை அறிந்து கொள்ளவும். யூ.பி.ஐ. அல்லது கட்டண அட்டைகள் வழியாக பயணச் சீட்டுகளை பெற்றிடவும். ஒரே பயணப் பதிவின் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் முடியும். இச்செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மக்கள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. 'சென்னை ஒன் செயலி' பொது போக்குவரத்து சேவையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும். இனி பொதுமக்கள் பயணச் சீட்டு பெற வரிசையில் காத்திருக்க தேவையில்லை. இந்த செயலி மூலம் எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம்.

இதில் கியூ.ஆர் கோடு வசதி இருக்கிறது. இதைக் கொண்டு ஸ்கேன் செய்தால் அனைத்து விதமான பொதுப் போக்குவரத்திலும் உரிய கட்டணத்தை எளிதாக செலுத்தி பயணச்சீட்டை பெறலாம். இதுதவிர மேலும் பல வசதிகள் கிடைக்கவுள்ளன.

சென்னை ஒன் (Chennai One) மொபைல் ஆப் மூலம் பயணிகளுக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கும்?

  • மாநகரப் பேருந்துகளில் எந்த நிறுத்தத்தில் இருந்து எந்த நிறுத்தம் வரை பயணிப்பது என்பதை தேர்வு செய்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
  • தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து அருகில் உள்ள பேருந்து நிலையம், ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் எது என்பதை காண்பிக்கிறது.
  • அருகிலுள்ள பொதுப் போக்குவரத்து வசதிகளை பெற எந்த வழித்தடத்தில் பயணிக்க வேண்டும் என்பதை காட்டுகிறது.
  • பயணிகள் செல்லவிருக்கும் வழித்தடம் குறித்த தெளிவான தகவல்களை பகிர்கிறது. எத்தனை நிமிடங்கள் ஆகும், என்னென்ன நிறுத்தங்கள் இருக்கின்றன போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.
  • எத்தனை டிக்கெட்கள் வேண்டும் என்பதை முடிவு செய்து கூகுள்பே, போன்பே, பேடிஎம் மூலம் பணத்தை செலுத்திவிடலாம்.
  • பேருந்துகள் வரும் வழித்தடத்தையும் காண்பிக்கிறது. இதனால் முன்கூட்டியே தயாராக காத்திருப்பதற்கு போதிய ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம்.
  • சென்னையில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களை காண்பிக்கின்றன. அதை கிளிக் செய்தால் ரயில், பேருந்து, ஆட்டோ போன்றவற்றின் மூலம் எப்படி செல்வது என்பதை காண்பிக்கிறது.

Chennai One மொபைல் செயலில் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது கட்டணத்தை செலுத்த நம் மொபைலில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ள வங்கி ஆப்கள், பிற யுபிஐ ஆப்களையும் ஆப்ஷனாக காண்பிக்கும். இதனால் எது எளிதாக இருக்கிறதோ, அதன்மூலம் விரைவாக கட்டணம் செலுத்திவிடலாம்.

மேலும் இந்த ஆப்பின் முதன்மையான பக்கத்தில் Bus Ticket, Bus OTP, Bus QR என மூன்று விதமான ஆப்ஷன்கள் காண்பிக்கப்படும். அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து மாநகரப் பேருந்துகளில் எளிதான டிக்கெட் வசதியை பெற முடியும். இதுபோன்ற அனைத்து பொதுப் போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் அறிமுகம் செய்யப்படும் மொபைல் ஆப் இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்பது கவனிக்கத்தக்கது.

Trending News

Latest News

You May Like