பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்டலாம்..! தமிழக அரசின் இந்த திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம்?

பழைய வீட்டில் இருப்பவர்கள் அதை மறுகட்டுமானம் செய்ய நினைத்தால், அதற்கும் தமிழ்நாடு அரசு நிதியுதவி அளிக்கிறது. “முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம்” என்ற திட்டத்தின் மூலம் பயனாளிகள் பலன் பெறலாம்
முதற்கட்டமாக ரூ.600 கோடியில் 25,000 புதிய வீடுகள் கட்டப்பட உள்ளது.
இதில் முழுமையாக சேதமடைந்து, பழுதுபார்க்க முடியாத நிலையில் உள்ள வீடுகளை, இணையதளத்தில் உள்ள பட்டியலின்படி, ரூ.2,40,000 லட்சம் செலவில், 210 சதுர அடி பரப்பளவில் புதிதாகக் கட்டலாம். முன்னர் கட்டப்பட்ட வீடுகள் (IAY, THADCO) 210 சதுர அடி பரப்பளவைக் கொண்டிருந்ததாலும், பயனாளிகளுக்கு சொந்தமான இடம் இப்பரப்பளவே இருக்கும் என்பதாலும், இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான பரப்பளவு 210 சதுர அடிக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது.
யார் யார் விண்ணப்பிக்கலாம்?
கிராமப்புறங்களில் 2000-2001ஆம் ஆண்டு வரை பல்வேறு அரசு திட்டங்களின்கீழ் கட்டப்பட்ட வீடுகளை பழுதுநீக்கம் செய்தல் தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு இத்திட்டத்திற்கு அடிப்படையாக இருக்கும்.
2000-2001 ஆம் ஆண்டு வரை IAY, THADCO, பழங்குடியினருக்கான திட்டங்கள் போன்ற பல்வேறு அரசுத் திட்டங்களின்கீழ் கட்டப்பட்டு, தற்போது பழுதுபார்க்க முடியாத நிலையில் உள்ள ஓடுகள் மற்றும் சாய்தள கான்கீரிட் கூரை கொண்ட வீடுகள் இந்தத் திட்டத்தின்கீழ் தகுதியுடையவை.
மறுகட்டுமானம் செய்யப்பட வேண்டிய வீடு, பயனாளியின் பெயரில் அரசுத் திட்டத்தின்கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் அல்லது ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளி இறந்திருப்பின், பயனாளியின் சட்டப்பூர்வ வாரிசாக உள்ள குடும்ப உறுப்பினர் அவ்வீட்டில் குடியிருக்க வேண்டும். அத்தகைய வீடு மட்டுமே மறுகட்டுமானத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். இவற்றிற்கு விலக்களிக்கும் விதமாக 2004ஆம் ஆண்டு சுனாமி பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்போதைய அரசு அரசு சாரா நிறுவனங்களின் கூட்டுப் பங்களிப்பு திட்டத்தின்கீழ் அரசு சாரா நிறுவனங்களின் மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிருவாக ஒப்புதலுடன் வீடுகள் கட்டப்பட்டு, தற்போது சேதமடைந்து பழுதுபார்க்க இயலாத நிலையில் உள்ள வீடுகளின் பயனாளிகளும், பிற வகையில் தகுதி பெற்றிருந்தால் சிறப்பினமாக இத்திட்டத்தின்கீழ் கருதப்படுவர்.
இந்தத் திட்டத்தின்கீழ் எடுக்கப்படும் வீட்டைத் தவிர, தனது பெயரில் சொந்தமாக கட்டப்பட்ட அல்லது பல்வேறு அரசு வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் ஏற்கனவே வழங்கப்பட்ட வீட்டினை சொந்தமாகக் கொண்டிருக்கக் கூடாது.
விற்கப்பட்ட வீடுகள், வாடகைக்கு விடப்பட்ட வீடுகள் மற்றும் சட்டப்பூர்வமற்ற வாரிசுகள் வசிக்கும் வீடுகள் இத்திட்டத்தின்கீழ் மறுகட்டுமானத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடாது.
ஓய்வுபெற்ற அல்லது பணிபுரியும் அரசு ஊழியர்களுக்குச் சொந்தமான வீடுகள் (பகுதிநேர, ஒப்பந்த நியமனம், தினக்கூலி நியமனம் தவிர) உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்களில் பணியிலிருப்போர் அல்லது அவர்களது வாழ்க்கைத் துணை ஆகியோரின் வீடுகள் இந்தத் திட்டத்தின்கீழ் எடுத்துக் கொள்ளப்படக் கூடாது.
தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி?
தகுதியான பயனாளிகளின் பட்டியலை tnrd.gov.in இணையதளத்தில் உள்ள "RRH Survey" என்ற தளத்தில் உள்ள பயனாளிகளின் விவரங்களை வட்டார அளவில் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் பதிவிறக்கம் செய்து பயனாளிகளின் தகுதி குறித்து கள ஆய்வு செய்ய வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் தகுதியை மதிப்பிடுவதற்காக, குழுவும் நிர்ணயிக்கப்படும். இந்தக் குழு அனைத்து வீடுகளையும் கூட்டாக ஆய்வு செய்து, இத்திட்டத்தின்கீழ் பயன்பெறத் தகுதியான பயனாளியை குழு உறுப்பினர்கள் கையொப்பத்துடன் பரிந்துரைக்கும். பயனாளிகளின் இறுதிப் பட்டியல் கிராம சபையில் ஒப்புதலுக்காக வைக்கப்படும்.
திட்டம் செயல்படும் முறை:
முதலில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையால் நிர்வாக அனுமதி வழங்கப்பட வேண்டும். எனவே வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) இத்திட்டத்தை செயல்படுத்தும் அலுவலர் ஆவார். பணி மேற்பார்வையாளர் வட்டாரப் பொறியாளர் ஆகியோர் வீடுகள் கட்டுவதற்கு தேவையான தொழில்நுட்ப உதவியை வழங்குவார்கள்.
பட்டியல் தொகை வழங்குவதற்காக வீட்டு கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து பணிமேற்பார்வையாளர் மதிப்பீட்டுச் சான்றிதழ் தயாரிப்பார். அதனை வட்டாரப் பொறியாளர் மேலொப்பம் செய்ய வேண்டும்.
பின், பட்டியல் தொகை நான்கு தவணைகளில் வழங்கப்படும். அடித்தள நிலையை அடைந்த பிறகு முதல் தவணை, லிண்டல் கான்கிரீட் அமைக்கும் கட்டத்தில் இரண்டாவது தவணை, மேற்கூரை கான்கிரீட் அமைக்கும் கட்டத்தில் மூன்றாவது தவணை மற்றும் பணி முடிந்த பிறகு நான்காவது தவணை வழங்கப்படும்.