பாராளுமன்ற பட்ஜெட் தொடர் இன்று ஆரம்பம் : இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல்..!
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அந்த வகையில் 2024-2025ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை வரும் 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். லோக்சபா தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இந்த முறை சுற்றுலாதுறை குறித்து சில அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பிருக்கிறது. எதிர்வரும் நாட்களில் கோடை விடுமுறை வர இருக்கிறது. அதேபோல தேர்தலும் நெருங்குவதால், பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். பல்வேறு அமைப்பு சாரா துறைகளில் வேலைவாய்ப்புகள் பெருகும். வருமானமும் அதிகரிக்கும். எனவே சுற்றுலாத்துறையை மையப்படுத்தி அதிக அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக இந்த துறை சார்ந்த பரிவர்த்தனைகளில் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்பது நீண்டகால எதிர்பார்ப்பு.
அதேபோல சுகாதாரத்துறையிலும் அதிக அளவு நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுகாதாரம் மற்றும் கல்வி என இரண்டுக்கும் சேர்த்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவிகிதத்தை ஒதுக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் நீண்ட கால கோரிக்கை. அதேநேரத்தில் உலக சுகாதார மையமும்,இந்தியாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதார கட்டமைப்புகள் குறித்து அடிக்கோடிட்டிருக்கிறது. எனவே இந்த முறை ஜிடிபியில் 2.5 சதவிகிதம் அளவுக்கு சுகாதாரத்திற்கு நிதி ஒதுக்கப்படலாம்.
மறுபுறம், டிஜிட்டல் தொழில்நுட்பங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பது தொழில் நிறுவனங்களின் கோரிக்கையாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்திருக்கிறது. இருப்பினும் இதனை மேலும் அதிகரிக்க இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகளை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. அதேபோல, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் புதிய அறிவிப்புகள் வெளியாகலாம்.
காப்பீட்டு துறையை பொறுத்த வரையில், ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருக்கிறது. எனவே இது குறித்த அறிவிப்பையும் துறை சார்ந்தவர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். மட்டுமல்லாது மக்களை கவரும் வகையில், பிஎம் கிசான் திட்டத் தொகையை இரு மடங்காக உயர்த்துவதாகவும் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இவ்வளவு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், இது மக்களவை, மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டமாக அமையும். இன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரை நிகழ்த்துவார். இந்த கூட்டம் வரும் 9ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், வர உள்ள தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தொடரில் பிரச்சனைகளை எழுப்ப வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை பெறுவதற்காக பாராளுமன்றத்தில் நேற்று அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.