மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட பட்ஜெட் இது : நிர்மலா சீதாராமன்!

மத்திய பட்ஜெட் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய நிர்மலா சீதாராமன் அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் புகழ்பெற்ற பேச்சை மேற்கோள் காட்டி பட்ஜெட் குறித்து பெருமிதம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
மத்திய பட்ஜெட் மக்களால், மக்களுக்காக, மக்களுடையதாக உள்ளது. வரிகளைக் குறைக்கும் யோசனைக்கு பிரதமர் மோடி முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி ஆதரித்தார். ஆனால் அதிகாரிகளை சம்மதிக்க வைக்கத்தான் அதிக நேரம் பிடித்தது. நேர்மையான வரி செலுத்துவோராக இருந்தும் தங்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்படவில்லை என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்த நடுத்தர வர்க்கத்தினரின் குரல்களுக்கு நாங்கள் செவி கொடுத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 8-வது முறையாக நேற்று சனிக்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மொத்தம் 1 மணி நேரம் 17 நிமிடங்களுக்கு அவர் பட்ஜெட் உரையை வாசித்தார். இதில், புதிய வருமான வரி விதிப்பு நடைமுறையின் கீழ் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மாத சம்பளதாரர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. கடந்த 2023-ல் ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டது. தற்போது புதிய வருமான வரி விதிப்பு நடைமுறையில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாத சம்பளம் பெறுவோருக்கான நிலையான கழிவு கடந்த பட்ஜெட்டில் ரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்பட்டது. ஆனால், மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாகவும், தேர்தலை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.