இன்று முதல் BS-IV சேர்ந்த டீசல் வாகனங்களை இயக்க தடை..!
தேசிய தலைநகர் டெல்லியில் காற்று மாசு தீவிரமான நிலையை எட்டியுள்ளது.காற்றின் தரம் கடுமையான வகைக்கு மோசமடைந்து வருவதால், டெல்லியில் இன்று (நவம்பர் 15) காலை 8 மணி முதல் GRAP 3 (Graded Response Action Plan 3) செயல்படுத்தப்படும் என காற்றின் தர மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி அத்தியாவசியமற்ற கட்டுமானம் மற்றும் கட்டிட இடிப்பு நடவடிக்கைகளுக்கு முழுவதுமாக தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசியமற்ற சுரங்க செயல்பாடுகள் நிறுத்தப்படுகிறது. தேசிய பாதுகாப்பு, சுகாதாரம், சில பொது உள்கட்டமைப்பு தொடர்பான கட்டுமான பணிகளுக்கு இந்த தடை பொருந்தாது.
டெல்லி, காசியாபாத், குருகிராம், ஃபரிதாபாத், கௌதம் புத் நகர் போன்ற தேசிய தலைநகர் பகுதிகளில் BS-III வகையை சேர்ந்த பெட்ரோல் வாகனங்கள் மற்றும் BS-IV வகையை சேர்ந்த டீசல் வாகனங்களை இயக்க தடை விதிக்கப்படுகிறது. சாலைகளில் தண்ணீர் தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஆரம்ப நிலையில் உள்ள கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வழியான கற்றல் தளங்களுக்கு மாற்றப்பட உள்ளது. மாசு அளவு அதிகரித்து வருவதால் டெல்லியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற்றப்படும் என்று டெல்லி முதல்வர் அதிஷி அறிவித்தார்.
GRAP-III செயல்படுத்தப்படுவதைக் கருத்தில் கொண்டு, நாளை முதல் வார நாட்களில் மெட்ரோ ரயிலில் 20 கூடுதல் பயண சேவை சேர்க்கப்படும். இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும் வரை வார நாட்களில் 60 கூடுதல் பயணங்கள் டெல்லி மெட்ரோவால் மேற்கொள்ளப்படும் என டெல்லி மெட்ரோ ரயில் கார்பொரேஷன் அறிவித்துள்ளது.