செங்கல்பட்டில் ரவுடி வெட்டி கொலை.. அதுவும் நீதிமன்ற வாசலில்..!

சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவர் மீது கொலை, கொலை முயற்சி ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்காக அவர் அடிக்கடி நீதிமன்றம் செல்வது வழக்கம். அதன்படி அவர் மீது உள்ள வழக்கு ஒன்றுக்காக நேற்று (ஜூலை 06) செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக லோகேஷ் சென்றார். நீதிமன்றத்திற்கு அருகே இருந்த கடை ஒன்றில் நின்று கொண்டிருந்தார். அப்போது, லோகேஷை அடையாளம் தெரியாத ஐந்து பேர் கொண்ட கும்பல் திடீரென சுற்றி வளைத்த ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் சிக்காத லோகேஷ் நீதிமன்றத்திலிருந்து 100 மீட்டர் தொலைவிற்கு ஓடி உள்ளார். லோகேஷை கொலை செய்யச் சென்ற கும்பல் அவர் மீது நாட்டு வெடி குண்டை வீசியது. இதில், 100 மீட்டர் தொலைவில் ஓடிக்கொண்டிருந்த லோகேஷ் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
பின்னாலே விரட்டிச் சென்ற அந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், கீழே விழுந்து கிடந்த லோகேஷை சரமாரியாக வெட்டி விட்டு அப்பகுதியில் இருந்து தப்பி ஓடி விட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், லோகேஷை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத், சம்பவ இடத்திற்குச் சென்று நேரில் விசாரணை மேற்கொண்டார்.
பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதியில் இது போன்ற சம்பவம் நடைபெற்றிருப்பது செங்கல்பட்டு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.