1. Home
  2. தமிழ்நாடு

டெக்னாலஜி மூலம் லஞ்சம்..! பள்ளி துணை ஆய்வாளர் அதிரடி சஸ்பெண்ட்!

1

திருவண்ணாமலை மாவட்டத்தின் சாரோன் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் ஏஎல்சி மேல்நிலை பள்ளியில் கணித பாட பட்டதாரி ஆசிரியராக கவிதா என்பவர் பணி நியமனம் பெற்றுள்ளார். ஆனால், அவரது நியமனத்திற்கு மாவட்ட கல்வி நிர்வாகம் அனுமதி அளிக்காத நிலையில், நீதிமன்றத்திற்கு சென்று நியமன உத்தரவு பெற்று இருக்கிறார். அதன் பிறகு கவிதாவின் நியமனத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர் ஒப்புதல் அளித்துள்ளார். இருப்பினும் ஆசிரியை கவிதாவின் நியமனத்திற்கு லஞ்சம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, ஒன்றரை லட்சம் ரூபாயை பள்ளி துணை ஆய்வாளர் (Deputy Inspector of Schools) என். செந்தில்குமார் கூகுள் பே மூலமாக கவிதாவிடம் இருந்து பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த தொகை செந்தில்குமாரின் மனைவி புஷ்பவள்ளியின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியை கவிதா திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்தார். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், பள்ளி துணை ஆய்வாளர் செந்தில்குமார் கூகுள் பே மூலமாக கவிதாவிடம் இருந்து பணம் பெற்றது தெரிய வந்தது.

இதனை அடுத்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ஆசிரியையின் பணி நியமனத்துக்கு லஞ்சம் வாங்கிய பள்ளி துணை ஆய்வாளர் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவில், செந்தில்குமாரின் இடைநீக்கம் காலத்தில் அடிப்படை விதி 53(i) இன் கீழ் அவருக்கு வாழ்வாதார உதவி மற்றும் இதர படிகள் வழங்கப்படும் எனவும் இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் முன் அனுமதி பெறாமல் மாவட்டத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like