#BREAKING: டிக் டாக் செயலி நாளை முதல் அமெரிக்காவில் தடை..!

டிக் டாக் செயலி நாளை முதல் அமெரிக்காவில் தடை செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
டிக் டாக் செயலியில் பதிவு செய்யப்படும் தகவல்கள் சீன அரசுடன் பகிரப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அமெரிக்க அரசு டிக் டாக் செயலிக்குத் தடை விதித்தது. மேலும், டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்தால் மட்டுமே தடை நீக்கப்படும் என்று அறிவித்திருந்தது.
டிக் டாக் எனப்படும் மொபைல் போன் செயலி உலகளவில் மிகவும் பிரபலமாக இருந்தது. இசை, நடனம், நடிப்பு எனப் பல்வேறு திறமைகளை வெளிக்காட்டும் தளமாக இது இருப்பதால் வயது வித்தியாசமின்றி பல்வேறு தரப்பினரும் இதைப் பயன்படுத்துகின்றனர்.
சீனாவைச் சேர்ந்த‘ பைட் டான்ஸ்’ என்ற நிறுவனம் இந்தச் செயலியை நிர்வகித்து வருகிறது.
டிக்டாக் மற்றும் அதன் தாய் நிறுவனமான Byte Dance குறித்து சட்ட மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் அதிக கவலை தெரிவித்தனர். டிக்டாக் மற்றும் பைட் டான்ஸ், இருப்பிடத் தகவல் போன்ற முக்கியமான பயனர் தகவல்களைச் சீன அரசாங்கத்திடம் கொடுக்கும் அச்சம் இருப்பதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர். இருப்பினும் டிக்டாக் நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடக்கத்தில் இருந்தே மறுத்து வருகிறது.
இந்தியா கடந்த 2020 ஆம் ஆண்டு டிக்டாக் செயலியைத் தடை செய்தது. சீனாவுக்குச் சொந்தமான டிக்டாக் செயலி உள்பட 59 செயலிகளைப் பயனர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி தடை செய்தது.
மேலும் பயனர்களின் டேட்டாவை இந்தியாவுக்கு வெளியே உள்ள சர்வர்களுக்கு அனுப்புவதாகவும் குற்றஞ்சாட்டி செயலிகளுக்குத் தடை விதித்தது.
கடந்த ஆண்டு நவம்பர் முதல் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் அரசு வழங்கிய சாதனங்களில் டிக்டாக் தடை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் டிக் டாக் தடை விதிக்கப்பட்டது.
இந்தத் தடை இந்த வார இறுதியில் அமலுக்கு வருகிறது. , டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்தால் மட்டுமே தடை நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்போவதில்லை என்று டிக் டாக் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதையடுத்து, டிக் டாக் தடை உறுதியென அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் டிக் டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
டிக் டாக் நிறுவனம் தொடர்ந்த இந்த வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், இதுகுறித்து கொண்டு வரப்பட்ட சட்டமானது, பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பை மீறவில்லை எனக்கூறியுள்ளது