#BREAKING : அதிமுகவினர் ஷாக்..! இரட்டை இலை சின்னம்! ஓபிஎஸ்-யிடம் கருத்து கேட்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பதவி ஏற்றிருக்கிறார்.
இந்த நிலையில் கட்சி சின்னம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் ஓபிஎஸ், சசிகலா தரப்பால் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கிறது.அதே நேரத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அது நீதிமன்றம் வரை வந்திருக்கிறது. திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்டதிட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017 முதல் 2022 ம் ஆண்டு வரை புகார்கள் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்னை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
தனது மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், சூர்ய மூர்த்தியின் மனு தொடர்பாக அதிமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு பதில் கிடைக்கப் பெற்றதாக கூறினார். இது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், திருமாறன் ,ராஜலட்சுமி ஆஜராகி இந்த விவகாரத்தில் தங்கள் தரப்புக்கு நோட்டீஸ் அளிக்கப்படவில்லை எனவும் தங்களது தரப்பையும் கேட்ட பின்னரே முடிவெடுக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து, சூர்ய மூர்த்தியின் மனு குறித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.