#BREAKING: ஜாபர் சாதிக் கைது..!
போதைப் பொருள் தயாரிக்க பயன்படும் முக்கிய ரசாயனப் பொருளான சூடோபெட்ரின், இந்தியாவில் இருந்து தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, டெல்லி சிறப்பு பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்புபிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் செயல்பட்டு வருவது தெரியவந்தது. அங்கு உள்ள குடோனில் போலீஸார் கடந்த 15-ம் தேதி அதிரடியாக நுழைந்து, சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தை சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் 50 கிலோ ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் சர்வதேச மதிப்பு ரூ.2,000 கோடி.
போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுகசென்னை மேற்கு மாவட்ட அயலகஅணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, திமுகவில் இருந்து அவர் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் சற்றுமுன் கைது செய்யப்பட்டார்.
கடந்த 10 நாள்களுக்கு மேல் தலைமறைவாக இருந்த நிலையில், பல கட்ட தேடலுக்கு பின் அவரை மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், அவரது நெருங்கிய கூட்டாளிகளும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.